இலங்கைத் தமிழரசுக் கட்சிக்குள் முடிந்து விடும் வேலையைத் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் செய்கின்றார் எனத் தமிழரசுக் கட்சியின் பதில் தலைவர் சி.வி.கே.சிவஞானம் கடுமையாகக் குற்றஞ்சாட்டியுள்ளார்.
யாழ்ப்பாணம், கல்வியங்காட்டிலுள்ள அவரது அலுவலகத்தில் நேற்று ஊடக சந்திப்பு ஒன்றை அவர் நடத்தியிருந்தார். இதன்போது ஜெனிவாவுக்குக் கடிதம் அனுப்ப கஜேந்திரகுமார் முன்னெடுத்துள்ள முயற்சி தொடர்பான கேள்விக்குப் பதிலளிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
அவர் மேலும் தெரிவித்தவை வருமாறு:-
“ஜெனிவாவுக்குக் கடிதம் ஒன்று ஏற்கனவே அனுப்பப்பட்டுள்ளது. அதில் பல தரப்புக்களுடன் நாங்களும் கையொப்பமிட்டு அந்தக் கடிதம் அனுப்பப்பட்டுள்ள நிலையிலையே மீளவும் ஒரு கடிதம் அனுப்ப முயற்சி நடக்கின்றது.
அவ்வாறு அந்தக் கடிதத்தில் நான் கையொப்பம் வைத்த பின்னர் எமது கட்சியின் பதில் பொதுச்செயலாளரான சுமந்திரன் வெளிநாட்டில் நிற்கின்றமையால் என்னிடம் தாம் கையெழுத்து வாங்கி விட்டார் எனக் கஜேந்திரகுமார் தெரிவித்திருக்கின்றார்.
உண்மையில் அவரது இந்தக் கருத்தை எமது கட்சிக்குள் ‘முடிந்து விடும்’ ஒரு நடவடிக்கையாகத்தான் பார்க்கின்றேன். சுமந்திரன் இல்லாமல் என்னிடம் கையெழுத்து வாங்கியதான அந்தக் கருத்து எங்களுக்குள் குழப்பத்தை ஏற்படுத்துவதற்காகக் கூறப்படுவதாகவே பார்க்கின்றேன்.
அவ்வாறு எங்களுக்குள் முடிந்து விடுகின்ற வேலையை அவர் பார்க்கத் தேவையில்லை. நாங்கள் இரகசியமாக எதனையும் செய்வதில்லை. கட்சிக்குள் கலந்து பேசித்தான் முடிவுகளை எடுத்துச் செயற்படுவோம் என்பதை வெளிப்படுத்திக் கொள்கின்றேன்.
இனத்துக்காக ஒற்றுமையாகச் சிலதைச் செய்ய நாங்கள் இணங்கி வந்திருக்கின்றோம். ஆனாலும் கூட தமிழரசுக் கட்சியை எந்நேரமும் விமர்சித்தும், கண்டித்தும், ஏளனம் செய்து கொண்டும் இருக்கையில் மீண்டும் மீண்டும் ஒற்றுமை எனக் கூறி வரச் சொன்னால் எப்படிப் போக முடியும்?
தமிழரசு மீது தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமாரின் குற்றச்சாட்டுக்கள் அபத்தமானவை. எங்களுக்கு எதிராகத் திட்டமிட்டே பொய்யான பரப்புரைகளை அவர் செய்து வருகின்றார்.
இலங்கைத் தமிழரசுக் கட்சியானது சர்வதேச விசாரணையைக் கைவிட்டு உள்ளகப் பொறிமுறைமை கோருவதாகக் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் கூறுகின்ற குற்றச்சாட்டு அபத்தமானது.
செம்மணி அகழ்வு தொடர்பில்தான் ஜனாதிபதிக்கு நாங்கள் கடிதம் அனுப்பியிருந்தோம். ஆட்சியில் உள்ள இந்த அரசு இப்போது செய்ய வேண்டிய விடயங்களைத்தான் அதில் குறிப்பிட்டிருந்தோம்.
அந்தக் கடிதமும் பகிரங்கமாக வெளிவந்தும் இருக்கின்றது. அதில் ஏதாவது ஓர் இடத்திலேனும் நாங்கள் உள்ளக விசாரணையைக் கோரவும் இல்லை.
அத்தகைய உள்ளக விசாரணையை நாங்கள் ஒருபோதும் வலியுறுத்தவில்லை. அதுமாத்திரமல்லாமல் சர்வதேச விசாரணை வேண்டாமென்றோ சொல்லவும் இல்லை.
ஆகவே, பொய்யான பரப்புரைகளைப் பரப்புவதை விடுத்து அதன் உண்மைத்தன்மையை வெளிப்படுத்த வேண்டும். இதனை விடுத்து பொய்யான குற்றச்சாட்டுக்களைச் சுமத்துவது அபத்தமானது.
குறிப்பாக சர்வதே விசாரணையை வலியுறுத்தி தமிழ்க் கட்சிகள் ஐ.நாவுக்கு அனுப்பிய கடிதத்தில் நாங்களும் கையொப்பம் வைத்துள்ளோம்.
இவ்வாறிருக்கையில் அரசியல் இலாபகங்களுக்காக எங்கள் மீது திட்டமிட்டு குற்றச்சாட்டுக்களை முன்வைப்பது ஏற்றுக்கொள்ள முடியாது. அத்தகைய குற்றச்சாட்டுக்களை அடியோடு நிராகரிக்கின்றோம்.
கடந்த தேர்தல் காலங்களிலும் எங்கள் மீது பல்வேறு குற்றச்சாட்டுக்களைச் சுமத்தினார்கள். ஆனால், இவர்களது பொய்யான குற்றச்சாட்டுக்களை மக்களும் ஏற்கவில்லை. அதனால் தங்களது முழுமையான ஆதரவை எங்களுக்கே மக்கள் வழங்கியிருக்கின்றார்கள்.
எமது மக்கள் வழங்கிய ஆணைக்கு அமைய நாம் எப்போதும் செயற்படுவோம். அதைவிடுத்து கஜேந்திரகுமார் நினைப்பது போன்று செயற்பட முடியாது.” – என்றார்.
Leave a comment