தமிழீழ விடுதலை புலிகள் இயக்கத்தை மீளுருவாக்கம் செய்ய முயற்சித்தனர் என்ற குற்றச்சாட்டில் கைதான தமிழ் இளைஞர்கள் 16 பேரை கொழும்பு மேல் நீதிமன்றம்
நேற்று விடுதலை செய்தது.
2017 தொடக்கம் 2020ஆம் ஆண்டு வரையான காலப்பகுதியில் யாழ்ப்பாணம், கிளிநொச்சி மாவட்டங்களில் இவர்கள் கைது செய்யப்பட்டனர்.
விடுதலைப் புலிகள் அமைப்பை மீளுருவாக்கம் செய்யும் நோக்கில் ஆயுதம், வெடிபொருட்களை சேகரித்தனர் என்று இவர்கள்மீது குற்றஞ்சாட்டி சட்ட மா அதிபர் குற்றப்பத்திரத்தை தாக்கல் செய்திருந்தார்.
எனினும், பிரதிவாதிகளின் தரப்பு சட்டத்தரணிகளின் வாதங்களை ஏற்ற கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி மகேஷ் வீரமன், 16 இளைஞர்களையும் விடுதலை செய்ய உத்தரவிட்டார்.
சட்ட மா அதிபரின் குற்றப்பத்திரம் நடைமுறையில் இருந்தாலும், நீதிமன்ற நியாயாதிக்க எல்லை என்ற அடிப்படையில், குறித்த 16 பேரும் யாழ்ப்பாண பிராந்தியத்தில் இடம்பெற்றவை என்று கூறப்படும் குற்றங்கள் தொடர்பிலேயே குற்றம் சுமத்தப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில் அவர்களுக்கு எதிராக கொழும்பு மேல் நீதிமன்ற நியாயாதிக்க எல்லைக்குள் வழக்கை விசாரிக்க முடியாது என்ற பிரதிவாதி தரப்பு சட்டத்தரணிகளின் வாதத்தை ஏற்ற நீதிபதி குறித்த 16 பேரையும் விடுதலை செய்தார்.
Leave a comment