பிள்ளையான் என்று அறியப்பட்ட முன்னாள் இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன், தாக்கல் செய்த அடிப்படை உரிமை மீறல் மனுவை விசாரணைக்கு எடுத்துக்கொள்ள உயர்நீதிமன்றம் நேற்று தீர்மானித்தது.
தாம் கைது செய்து தடுத்து வைக்கப்பட்டுள்ளதன் மூலம் தமது அடிப்படை உரிமைகள் மீறப்பட்டுள்ளன என்று தீர்ப்பளிக்குமாறு கோரி அவர் இந்த மனுவைத் தாக்கல் செய்துள்ளார்.
அரசமைப்பின் பிரிவுகள் 12(1)இன்படி சட்டத்தின் முன் சமமற்ற முறையில் நடத்துதல், 12(2)இன்படி அரசியல் கருத்தின் அடிப்படையில் பாகுபாடு, 13(1)இன்படி காரணமின்றிக் கைது மற்றும் 13(2)இன்படி சட்டத்தின் சரியான செயல்முறை இல்லாமல் கைது ஆகியவற்றின் கீழ் இந்த வழக்கை விசாரிக்க உயர்நீதிமன்றம் முடிவு செய்துள்ளது.
மனுதாரரான பிள்ளையான் சார்பாக ஜனாதிபதி சட்டத்தரணி மனோகர டி சில்வா, சட்டத்தரணி உதய கம்மன்பில ஆகியோர் மன்றில் முன்னிலையாகியிருந்தனர்.
பிள்ளையான் கடந்த ஏப்ரல் 8ஆம் திகதி குற்றப் புலனாய்வுத் திணைக்கள
அதிகாரிகளால் கைது செய்யப்பட்டிருந்தார். பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட அவர், கிழக்கு பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தர் பேராசிரியர் சிவசுப்ரமணியம் ரவீந்திரநாத் கடத்தப்பட்டுக் காணாமல் ஆக்கப்பட்டமை தொடர்பில் கைது செய்யப்பட்டார் என்று தெரிவிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
Leave a comment