கொழும்பு – வெள்ளவத்தையில் உள்ள ஒரு சொகுசு அடுக்குமாடி குடியிருப்பில் தங்க முலாம் பூசப்பட்ட ரி – 56 ரக துப்பாக்கி கண்டுபிடிக்கப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த முன்னாள் அமைச்சர் துமிந்த திஸாநாயக்கவுக்குக் கடும் நிபந்தனைகளுடன் பிணை வழங்கப்பட்டுள்ளது.
இன்று திங்கட்கிழமை துமிந்த திஸாநாயக்க கொழும்பு மேல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டதை அடுத்து இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
இதன்படி, துமிந்த திஸாநாயக்கவை 2 இலட்சத்து 50 ஆயிரம் ரூபா ரொக்கப் பிணையிலும், தலா 50 இலட்சம் ரூபா மதிப்புள்ள இரண்டு சரீரப் பிணைகளிலும் விடுவிக்க கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி மஞ்சுல திலகரத்ன உத்தரவிட்டார்.
சரீரப் பிணை வழங்கும் இரண்டு நபர்களும் கொழும்புப் பகுதியில் வசிப்பவர்களாக இருக்க வேண்டும் எனவும் நீதிபதி தீர்ப்பளித்தார்.
மேலதிகமாக, சந்தேகநபருக்குப் பயணத் தடை விதித்த நீதிமன்றம், அவரது கடவுச்சீட்டை நீதிமன்றத்தில் ஒப்படைக்குமாறும் உத்தரவிட்டது.
சந்தேகநபருக்குப் பிணை வழங்குவதற்குச் சட்டமா அதிபர் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் கடும் எதிர்ப்புத் தெரிவித்த போதிலும், கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி தீர்ப்பை வழங்கும் போது, சந்தேகநபர் துப்பாக்கி வைத்திருந்தது இன்னும் வெளிப்படுத்தப்படாததால் நீதிமன்றம் பிணை வழங்கத் தீர்மானித்துள்ளது என்று அறிவித்தார்.
கடந்த மே மாதம் 23 ஆம் திகதி பயங்கரவாதப் புலனாய்வுப் பிரிவினர் முன்னெடுத்த விசாரணைகளின் பின்னர் முன்னாள் அமைச்சர் துமிந்த திஸாநாயக்க கைது செய்யப்பட்டார். பின்னர் அவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட பின்னர் விளக்கமறியலில் வைக்கப்பட்டார்.
மே மாதம் 20 ஆம் திகதி கொழும்பு – வெள்ளவத்தையில் உள்ள ஒரு சொகுசு அடுக்குமாடி குடியிருப்பில் பெண்ணின் பயணப் பையில் கண்டுபிடிக்கப்பட்ட தங்கமுலாம் பூசப்பட்ட ரி – 56 ரக துப்பாக்கி தொடர்பில் துமிந்த திஸாநாயக்க கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
Leave a comment