இலங்கை உட்பட வளர்ந்து வரும் நாடுகளிலிருந்து ஆடை உள்ளிட்ட பொருட்களை வரியின்றி இறக்குமதி செய்வதற்குப் பிரித்தானிய அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
இலங்கைக்கான பிரித்தானிய உயர்ஸ்தானிகராலயம் வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.
இலங்கை போன்ற நாடுகள், பிரித்தானியாவுடன் வர்த்தக நடவடிக்கைகளில் ஈடுபடுவதனை இலகுபடுத்தும் நோக்கிலும், பிரித்தானிய மக்களுக்கு குறைந்த விலையில் பொருட்களைப் பெற்றுக் கொடுக்கும் நோக்கிலும், இந்த புதிய வர்த்தக திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த செயற்பாடு, இலங்கை உள்ளிட்ட நட்பு நாடுகளின் பொருளாதார வளர்ச்சியை ஆதரிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளதாக பிரித்தானிய உயர்ஸ்தானிகராலயம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் பிரித்தானிய அரசாங்கத்தின் புதிய வர்த்தக திட்டம், தொடர்பில் கருத்துரைத்துள்ள இலங்கைக்கான பிரித்தானிய உயர்ஸ்தானிகர் என்ரூ பெட்றிக், இது இலங்கையின் ஆடைத்துறைக்கும் பிரித்தானியாவின் நுகர்வோருக்கும் கிடைத்த வெற்றி என்று குறிப்பிட்டுள்ளார்.
பிரித்தானியா, இலங்கையின் இரண்டாவது பெரிய ஏற்றுமதி சந்தையாக விளங்குவதுடன் மொத்த வர்த்தகத்தில் 60 சதவீதத்துக்கும் அதிகளவான ஆடைகள் பிரித்தானியாவுக்கு ஏற்றுமதி செய்யப்படுவதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இலங்கையின் ஆடைகள் மாத்திரமின்றி, பரந்த அளவிலான பொருட்களுக்கும் பிரித்தானியாவின் வர்த்தக திட்டத்தை, வளர்ந்து வரும் நாடுகள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Leave a comment