வடமராட்சி கிழக்கு சுண்டிக்குளம் ஜே/435 கிராம சேவகர் பிரிவில் மக்களின் காணிகள் இரகசியமான முறையில் கடற்படையால் அளவீடு செய்யப்பட்டுள்ளதாக வடக்கு மாகாண காணிக்கான மக்கள் உரிமை இயக்கத்தின் தலைவர் இ. முரளிதரன் தெரிவித்துள்ளார்.
நேற்று ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே இவ்வாறு கூறினார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்-
வடமராட்சி கிழக்கு சுண்டிக்குளம் பகுதியான ஜே/435 கிராம சேவகர்
பிரிவில் அமைந்திருக்கின்ற மக்களின் மீன்பிடி நிலங்கள், மக்களுக்குரிய காணிகள் திருகோணமலையில் இருந்து வந்த கடற்படையின் ஒரு குழுவால் மிக இரகசியமாக அளவீடு செய்யப்பட்டுள்ளன.
தங்களுடைய சொந்த காணிகள் கடற் படையினரால் அளவீடு செய்யப்படுவதை அறிந்த அங்கு இருந்த ஒரு சில மக்கள் கடற்படையிடம் கேள்வி எழுப்பியபோது
உங்களுடைய காணி என்றால் அனுமதிப் பத்திரத்தை காட்டுமாறு கோரினர் என மக்கள் கூறுகின்றனர்.
சுண்டிக்குள பகுதியில் காணப்படும் அதிகளவான காணிகள் அரச காணிகளாக காணப்படுகின்றன. அங்கு வசித்த மக்களின் காணிகளுக்கு உறுதி இருக்காது.
மக்கள் காலாகாலம் அந்த காணியில் வாழ்ந்து வந்தார்கள். ஆனால் அவர்கள் வாழ்ந்த காணியை தற்போது சுவீகரிப்பதற்கு கடற்படை முயற்சிக்கின்றது. அந்தப் பகுதியில் மக்கள் நீண்ட காலமாக வாழ்ந்ததற்கான சான்றுகள் இருக்கின்றன. வீடுகள், கிணறுகள், அங்கே மக்களால் பராமரிக்கப்பட்ட மரங்களும் இருக்கின்றன.
இது தொடர்பாக அப்பகுதி கிராம அலுவலருக்கோ, வடமராட்சி கிழக்கு பிரதேச செயலருக்கோ தெரியப்படுத்தப்படவில்லை.
ஒரு பிரதேசத்தில் ஒரு காணியை அளவீடு செய்யவேண்டும் என்று சொன்னால் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு தெரியப்படுத்தவேண்டும்.
மீனவர் சங்கம், பிரதேச செயலர், கிராம அலுவலர், காணிக் கிளையினர் ஆகிய அதிகாரிகளுக்கு தெரியப்படுத்தாமல் மிக இரகசியமாக இந்த காணிகளை அளவீடு செய்துள்ளார்கள்.
காலப்போக்கில் இந்தப் பகுதியில் கடற்தொழில் செய்கின்ற மக்கள் கடற்றொழில் செய்ய முடியாத நிலைமை உருவாகப் போகின்றது. சுண்டிக்குளம் பகுதியில் கடற்படையின் தளங்கள் விஸ்தரிக்கப்படப்போகின்றன.
மக்களின் காணிகள் மக்களுக்கு விடுவிக்கப்பட வேண்டும். இல்லை என்று சொன்னால் மக்களை ஒருங்கிணைத்து இந்த காணிகளை விடுவிப்பதற்கான போராட்டங்களை செய்வோம்-என்றார்.
Leave a comment