எதிர்காலத்தில், வெளிநாடுகளில் வசிக்கும் இலங்கையர்களுக்கு வாக்குரிமையை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என வெளிவிவகார, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலா அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.
பொதுநிர்வாக அமைச்சின் கீழ் ஏற்பாடுகள் தற்போது இடம்பெற்றுவருவதாக அமைச்சர் விஜித ஹேரத் குறிப்பிட்டுள்ளார்.
இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் 40வது வருட நிறைவை முன்னிட்டு இன்று திங்கட்கிழமை (27) இடம்பெற்ற நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே இதனை குறிப்பிட்டுள்ளார்.
அமைச்சர் மேலும் கருத்து தெரிவிக்கையில், வெளிநாட்டில் வசிக்கும் அனைவருக்கும் வாக்களிக்க தேவையான வசதிகளை வழங்கவும், தேவையான சட்ட நிலைமைகளை உருவாக்கவும் பொது நிர்வாக அமைச்சு ஏற்கனவே விசேட குழுவை நியமித்துள்ளதாக தெரிவித்துள்ளார்.
மேலும், வெளிநாட்டில் வசிக்கும் அனைவருக்கும் பங்களிப்பு ஓய்வூதிய முறையை அறிமுகப்படுத்த தேவையான சட்ட ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருவதாகவும் இதன்போது வெளிவிவகார, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலா அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.
Leave a comment