இந்திய அமைதி காக்கும் படையினரால் 1989ஆம் ஆண்டு வல்வெட்டித்துறையில் நடத்தப்பட்ட படுகொலைகளில் கொல்லப்பட்ட, காயமடைந்தவர்கள் மற்றும் ஏற்படுத்தப்பட்ட சொத்து இழப்புகளுக்கு 450 கோடி ரூபாயை இழப்பீடாக வழங்க வேண்டும் என்று சர்வதேச உண்மை மற்றும் நீதிக்கான செயல் திட்டம் புரிந்துரைத்துள்ளது.
வல்வை படுகொலையின்போதான இழப்புகளுக்கான இழப்பீட்டு பரிந்துரை அறிக்கை
வெளியீடு, கடந்த மார்ச் மாதம் வெளியிடப்பட்ட வல்வெட்டித் துறை ஒரு படுகொலையின் வாக்குமூலங்கள் நூல் வெளியீடு என்பன நேற்றைய தினம் வடமராட்சி ஊடக
இல்லத்தில் நடைபெற்றன.
வல்வெட்டித்துறை பிரஜைகள் குழுவின் அனுசரணையுடன் சர்வதேச உண்மை மற்றும் நீதிக்கான செயல் திட்ட அமைப்பால் தயாரிக்கப்பட்டுள்ள வல்வெட்டித்துறை படுகொலை சம்பவத்தின்போது நிகழ்ந்த இழப்புகளுக்கான இழப்பீட்டு பரிந்துரை அறிக்கையை வல்வெட்டித்துறை பிரஜைகள் குழு செயலாளர் ந. அனந்தராஜ் வெளியிட்டு வைத்திருந்தார்.
அந்த அறிக்கையில்,
உயிரிழப்புக்கான இழப்பீடுகளை மதிப்பீடு செய்வதற்கு இலங்கை அரசாங்கத்தால் 2022இல் மேற்கொள்ளப்பட்ட முடிவை உதாரணமாக பின்பற்றி, ஒரு பாராளுமன்ற உறுப்பினரின் உயிரிழப்புக்கு ஒரு கோடி ரூபாயை இழப்பீடாக வழங்கியதன் அடிப்படையில் 1989ஆம் ஆண்டு நிலவரத்தின்படி 4 இலட்சத்து 50 ஆயிரம் ரூபாயாகும்.
இதனடிப்படையில் வல்வெட்டித்துறை படுகொலை சம்பவத்தின்போது கொல்லப்பட்ட 66 பேருக்கும் 2 கோடியே 97 இலட்சம் (ரூ. 29,750,574) ரூபாய் இழப்பீடாக மதிப்பிடப்பட்டுள்ளது.
காயமடைந்த 36 பேருக்கான இழப்பீடாக 13 இலட்சத்து 80 ஆயிரம் (ரூ. 1,380,025)
அழிக்கப்பட்ட சொத்துகளுக்கான இழப்பீடாக 5 கோடியே 75 இலட்சத்து 97 ஆயிரம் (57,597,068) ரூபாயுமாக எல்லாமாக 8 கோடியே 87 இலட்சத்து 27 ஆயிரம் (88,727,667) ரூபாய் மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது.
மேற்குறித்த தொகைக்கு 1989 ஓகஸ்ட் முதல் 2025 மே மாதம் வரையான காலத்துக்கான வட்டியாக 443 கோடி (ரூ. 4,433,174,088) ரூபாய் சேர்த்து 450 கோடி (4,521,901,754.00) ரூபாயை இழப்பீடாக வழங்க வேண்டும் – என்று பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
முன்னதாக, வல்வை படுகொலை சம்பவத்தில் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது. இதன் போது மாவீரர் ஒருவரின் தந்தையான சுந்தரலிங்கம் பொதுச்சுடரை ஏற்றினார்.
இதைத் தொடர்ந்து பங்கேற்றிருந்தவர்களும் மெழுகுவர்த்தி ஏற்றி அஞ்சலி செலுத்தினர்.
தொடர்ந்து மலர் அஞ்சலி செலுத்தப்பட்டு, ந. அனந்தராஜ் இழப்புகளுக்கான இழப்பீட்டு அறிக்கை,
வல்வெட்டித்துறை ஒரு படுகொலையின் வாக்குமூலங்கள் நூல் ஆகியவற்றை வெளியிட்டு வைத்தார்.
நூலின் முதல் பிரதியை பருத்தித்துறை நகராட்சி மன்ற தவிசாளர் வின் சென் டீ போல் டக்ளஸ் போல் பெற்றுக் கொண்டார்.
இந்த நிகழ்வில் அரசியல் தரப்பினர், பாதிக்கப்பட்ட மக்கள் மற்றும் பலர் எனப் பலர் பங்கேற்றனர்.
Leave a comment