உண்மை மற்றும் நீதியை நிலைநாட்டுவதற்கும், நிலையான சமாதானத்துக்கான அடித்தளத்தை இடுவதற்குமான வரலாற்று ரீதியான வாய்ப்பும், சகல சமூகங்களையும் சேர்ந்த மக்களின் ஆணையும் புதிய அரசாங்கத்துக்கு இருப்பதாக ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் அலுவலகத்தின் இறுதி அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டிருக்கும் அதேவேளை, சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின் ரோம் பிரகடனத்துக்கு இணங்குவதன் ஊடாக நிலைமாறுகால நீதிக்கு ஏதுவான சூழலை அரசாங்கம் உருவாக்கவேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 60 ஆவது கூட்டத்தொடர் எதிர்வரும் திங்கட்கிழமை ஆரம்பமாகவிருக்கும் நிலையில், இலங்கையின் மனித உரிமைகள் நிலைவரம் பற்றிய ஐ.நா மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் அலுவலகத்தின் முற்கூட்டிய வரைவு அறிக்கை கடந்த மாத நடுப்பகுதியில் வெளியிடப்பட்டது. அவ்வறிக்கைக்கு இலங்கை அரசாங்கம் பதில் வழங்கியதன் பின்னரா இறுதி அறிக்கை உயர்ஸ்தானிகர் அலுவலகத்தினால் தற்போது வெளியிடப்பட்டுள்ளது.
‘பயங்கரவாதத்தடைச்சட்டம் உள்ளடங்கலாக சகல ஒடுக்குமுறைச்சட்டங்களையும் இல்லாதொழிப்பதாகப் புதிய அரசாங்கம் வாக்குறுதி அளித்திருந்தது. அச்சட்டத்தை முற்றாக நீக்குவது குறித்து ஆராய்வதற்கும், புதிய பயங்கரவாத எதிர்ப்புச்சட்டம் தொடர்பில் பரிந்துரைகளை முன்வைப்பதற்குமென கடந்த பெப்ரவரி மாதம் அரசாங்கத்தினால் விசேட குழுவொன்று நியமிக்கப்பட்டது.
அத்தோடு புதிய பயங்கரவாத எதிர்ப்புச்சட்ட வரைவைத் தயாரிப்பதற்கான பரிந்துரைகள் மற்றும் யோசனைகளை அனுப்பிவைப்பதற்கு பொதுமக்களுக்கு வெறுமனே இரண்டு வார காலஅவகாசத்தை வழங்கும் அறிவிப்பு கடந்த மேமாதம் அரசாங்கத்தினால் வெளியிடப்பட்டது.
அப்புதிய சட்டமூலத்தை எதிர்வரும் செப்டெம்பர் மாதம் வர்த்தமானியில் வெளியிடுவதற்கு அரசாங்கம் திட்டமிட்டுள்ளது. இது இவ்வாறிருக்க அரசாங்கமானது நபர்களைக் கைதுசெய்வதற்கும், தடுத்துவைப்பதற்கும் பயங்கரவாதத்தடைச்சட்டத்தைத் தொடர்ந்து பயன்படுத்திவருகிறது.
இவ்வறிக்கை தொடர்பான ஆணை வழங்கப்பட்டிருக்கும் காலப்பகுதியில் நினைவுகூரல்கள் மற்றும் ஆர்ப்பாட்டங்களில் பங்கேற்றவர்கள் மற்றும் அவற்றை ஒழுங்குசெய்தவர்கள் உள்ளடங்கலாகப் பிரதானமாக தமிழ் மற்றும் முஸ்லிம் சமூகத்தைச்சேர்ந்த நபர்கள் இச்சட்டத்தின்கீழ் கைதுசெய்யப்பட்டிருக்கிறார்கள்.
சட்டம் ஒழுங்கைப் பேணுவதில் படையினரை ஈடுபடுத்துவதற்கு ஜனாதிபதிக்கு அதிகாரமளிக்கும் வகையில் பொதுப்பாதுகாப்புக் கட்டளைச்சட்டத்தின் 12 ஆவது பிரிவின்கீழ் வெளியிடப்பட்டுவரும் அதிவிசேட வர்த்தமானி அறிவித்தலும் தற்போதைய அரசாங்கத்தினால் தொடர்ந்து புதுப்பிக்கப்பட்டுவருகிறது’ என அவ்வறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
அதேபோன்று ‘யுத்தம் முடிவுக்குக்கொண்டுவரப்பட்டு 16 ஆண்டுகள் கடந்துள்ள நிலையில், ஆக்கபூர்வமானதும் செயற்திறன்மிக்கதுமான பாதுகாப்புத்துறை மறுசீரமைப்புக்கள் முன்னெடுக்கப்படவேண்டியுள்ளன.
குறிப்பாக வட, கிழக்கு மாகாணங்களில் வலிந்து காணாமலாக்கப்பட்டோரின் குடும்பத்தினர், சமூகத்தலைவர்கள், சிவில் சமூக செயற்பாட்டாளர்கள், பொறுப்புக்கூறல் மற்றும் வலிந்து காணாமலாக்கப்படல்கள் உள்ளிட்ட சமூகப்பிரச்சினைகள் சார்ந்து இயங்கிவருவோர் மீதான கண்காணிப்புக்கள் மற்றும் ஒடுக்குமுறைகள் தொடர்கின்றன’ எனவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் ‘யுத்தம் முடிவுக்குக்கொண்டுவரப்பட்டு 16 வருடங்கள் கடந்துள்ள நிலையில், யுத்தகாலத்தில் சர்வதேச குற்றங்கள் உள்ளடங்கலாக மிகமோசமான மீறல்கள் நிகழ்ந்தன என்பதை ஏற்றுக்கொள்வதும், அதுகுறித்து உரியவாறான தீர்வை வழங்குவதும், பாதிக்கப்பட்ட தரப்பினருக்கான உண்மை மற்றும் நீதியை உறுதிசெய்வதும் அவசியமாகும்.
மிகமோசமான குற்றங்கள் தொடர்பில் முழுமையான விசாரணைகளை முன்னெடுத்து உண்மையையும், நீதியையும் உறுதிசெய்வதற்குத் தமது அரசாங்கம் தயாராக இருப்பதாக ஜனாதிபதி அவரது கொள்கைப்பிரகடன உரையில் குறிப்பிட்டிருந்தார்.
அவரது இக்கருத்தானது செயல் வடிவம் பெறுமாயின், அதனூடாக பொறுப்புக்கூறலை உறுதிப்படுத்துவதற்கான புதுப்பிக்கப்பட்டதொரு வாய்ப்பு கிட்டும். இருப்பினும் தண்டனைகளிலிருந்து விடுபடும் போக்கு இன்னமும் தொடர்வதுடன், கடந்தகால மீறல்களுக்கு வழிகோலிய கட்டமைப்பு ரீதியான நிலைமைகள் மாற்றமின்றிக் காணப்படுகின்றன’ என்றும் அவ்வறிக்கையில் கரிசனை வெளியிடப்பட்டுள்ளது.
Leave a comment