நீதிமன்றத்தால் அழைப்பாணை அனுப்பப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்னவை இதுவரை கண்டுபிடிக்க முடியாமையால் நீதிமன்ற அதிகாரிகள் குழுவினர், மாலபேயில் உள்ள அவரது வீட்டிற்குச் இன்று சென்று அறிவித்தலை ஒட்டியுள்ளனர்.
நீதிமன்றத்தில் முன்னிலையாகுமாறு தெரிவித்து குறித்த அறிவித்தல் ஒட்டப்பட்டுள்ளது.
அத்தோடு, குறித்த அழைப்பாணை தொடர்பாக அவரது வீட்டிற்கு முன்னால் ஒலிப்பெருக்கியில் பொதுமக்களுக்கு அறிவிக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
கிரிந்த மீன்பிடித் துறைமுகத்தில் மணல் அகற்றும் திட்டத்தை சட்டவிரோதமாக செயல்படுத்தியதால் அரசுக்கு 262 இலட்சம் ரூபாய் இழப்பு ஏற்பட்டதாக கையூட்டல் ஒழிப்பு ஆணைக்குழு மனுவொன்றை தாக்கல் செய்திருந்தது.
அந்த மனுவின் சமர்ப்பணங்களை பரிசீலித்ததன் பின்னர், முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்னவுக்கு நீதிமன்றம் அழைப்பாணை அனுப்பியது.
இதன்படி எதிர்வரும் 29 ஆம் திகதி நீதிமன்றத்தில் முன்னிலையாகுமாறு கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றம் அழைப்பாணை அனுப்பியமை குறிப்பிடத்தக்கது.
Leave a comment