பொய்களைக் கூறி ஆட்சி செய்த ராஜபக்ஷ குடும்பத்தைப் போல் தற்போது பொய்களாலேயே ஆட்சி செய்யும் அநுர அணியும் மிக விரைவில் வீட்டுக்கு விரட்டியடிக்கப்படும் என்று ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் காவிந்த ஜயவர்தன தெரிவித்தார்.
இது தொடர்பில் ஊடகங்களிடம் அவர் மேலும் குறிப்பிடுகையில்,
“கடந்த 10 மாதங்களாகப் பொய்களாலேயே தேசிய மக்கள் சக்தி நாட்டை ஆட்சி செய்து கொண்டிருக்கின்றது. இதற்கு மத்தியில் தற்போது தேசிய மக்கள் சக்திக்கும் ஜே.வி.பி.க்கு இடையில் கடுமையான முரண்பாடுகள் தோற்றம் பெற்றுள்ளன.
சிச்சியின் செய்மதி விவகாரத்தில் பிரதமர் ஹரிணி அமரசூரியவும் அமைச்சர் வசந்த சமரசிங்கவும் முரண்பட்ட கருத்துக்களைக் கூறியதால் அவை பகிரங்கமாக வெளிப்படுத்தப்பட்டுள்ளன.
இது சமூகத்தில் பாரிய சர்ச்சையைத் தோற்றுவித்துள்ளதால் முதலீட்டு சபையின் அதிகாரிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கவுள்ளதாக வசந்த சமரசிங்க குறிப்பிட்டுள்ளார்.
அந்த அதிகாரிகள் தவறான தகவலை வழங்கியிருந்தாலும் பிரதமரே சரியான தகவல் எது என்பதைத் தெளிவுபடுத்தியிருக்க வேண்டும். ஆனால், தற்போது வசந்த சமரசிங்கவே அதனைச் செய்து கொண்டிருக்கின்றார்.
எனினும், அவருக்கு இன்னும் இது குறித்த தெளிவு இல்லை. இவ்வாறான சர்ச்சைகளுக்கு மத்தியில் மறுபுறம் மனிதப் படுகொலைகளில் ஈடுபட்டு வரும் பாதாள உலகக் கும்பலும் தலைதூக்கியுள்ளது. நாளாந்தம் துப்பாக்கிச்சூடுகளால் உயிர்கள் பறிக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றன.
உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதல்கள் இடம்பெற்ற போது அப்போதைய அரசு அதற்குப் பொறுப்பு கூற வேண்டும் என வலியுறுத்திய தேசிய மக்கள் சக்தி, பாதாள உலகக் கும்பல்களால் கொல்லப்படும் உயிர்களுக்குப் பொறுப்பு கூற வேண்டும் என நாம் வலியுறுத்துகின்றோம்.
பாதாள உலகக் கும்பல்களுடன் தொடர்புடையவர்கள் மாத்திரமின்றி அப்பாவி மக்களும் இதனால் பாதிக்கப்படுகின்றனர். பொது வெளியில் இடம்பெற்றுக் கொண்டிருக்கும் இந்த அழிவு தொடர்பில் அரசில் எவரும் வாய் திறப்பதில்லை.
கடந்த ஆட்சியாளர்களைப் போன்று நாம் ஊடகங்களில் பிரசாரங்களை நடத்தப் போவதில்லை எனக் கூறிய இவர்கள், தற்போது பஸ் சேவையொன்றை மீள ஆரம்பித்து வைப்பதை மேள, தாள வாத்தியங்களுடன் பட்டாசு கொளுத்தி ஒரு பிரம்மாண்ட நிகழ்வாகக் கொண்டாடுகின்றனர்.
மஹிந்த ராஜபக்ஷ அம்பாந்தோட்டை துறைமுகத்தை திறந்து வைத்தபோதோ அல்லது அதிவேக நெடுஞ்சாலையைத் திறந்து வைத்த போதே இந்தளவுக்குப் பிரம்மாண்ட நிகழ்வை நடத்தவில்லை.
தேசிய பாதுகாப்பை உறுதிப்படுத்தத் தவறியவர்கள் பஸ் சேவையை ஆரம்பித்து வைத்து விட்டு கொண்டாட்டம் நடத்துகின்றனர். தேசிய பாதுகாப்பு தொடர்பில் எமக்கு வகுப்பெடுப்பதாகக் கூறியவருக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணையைச் சமர்ப்பத்திருக்கின்றோம். தைரியமிருந்தால் அதற்கு ஆதரவாக வாக்களிக்குமாறு ஆளுந்தரப்பினருக்குச் சவால் விடுக்கின்றோம்.
சாய்ந்தமருது தாக்குதல்களின் போது கிழக்கு கட்டளைத் தளபதியாக செயற்பட்டவரே தற்போதைய பிரதிப் பாதுகாப்பு அமைச்சர்.
அரசால் அரசு தொடர்பான விசாரணைகள் முன்னெடுக்கப்படும் போது எவ்வாறு நீதியை எதிர்பார்க்க முடியும்? ஜனாதிபதி வெளிநாடுகளுக்குச் செல்லும் போது இவரே பதில் பாதுகாப்பு அமைச்சராகச் செயற்படுவார்.
அவ்வாறான சந்தர்ப்பங்களில் விசாரணைகள் பக்கச்சார்பின்றி முன்னெடுக்கப்படும் என்று எவ்வாறு நம்புவது? பதவி விலகாவிட்டால் அவருக்கு வேறொரு அமைச்சை வழங்குவதற்கேனும் ஜனாதிபதி நடவடிக்கை எடுத்திருக்கலாம். ஆனால் அவ்வாறு செய்யவில்லை.
எனவே, நம்பிக்கையில்லாப் பிரேரணையை நிறைவேற்றுவதற்கான சகல முயற்சிகளையும் நாம் முன்னெடுப்போம்.” – என்றார்.
Leave a comment