அரசியல் பழிவாங்கல்களைத் தவிர இந்த அரசால் வேறு எந்த நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்படவில்லை என்று முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
முன்னாள் ரணில் விக்கிரமசிங்கவை இன்று முற்பகல் சிறைச்சாலை வைத்தியசாலையில் பார்வையிட்டதன் பின்னர் ஊடகங்களுக்குக் கருத்துரைக்கும்போதே மஹிந்த மேற்கண்டவாறு கூறியுள்ளார்.
அரசியல் தலைவர்கள் சிறிய குற்றங்களுக்காகச் சிறையில் அடைக்கப்படுவது குறித்து தனது வருத்தத்தையும் மஹிந்த இதன்போது வெளிப்படுத்தியுள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
“நீங்கள் அரசியலில் ஈடுபட்டால், அது உங்கள் வாழ்க்கைப் பயணத்தின் ஒரு பகுதி. தற்போதைய அரசின் நடவடிக்கைகள் குறித்து மக்கள் சரியான புரிதலைக் கொண்டுள்ளனர். இந்த நடவடிக்கைகள் பழிவாங்கும் செயல்களைத் தவிர வேறொன்றும் இல்லை. மக்கள் அரசியல் தலைவர்களைத் தொடர்ந்து ஆதரித்து வருகின்றார்கள். நாம் மக்களை நேசிக்கின்றோம். அதனால்தான் மக்கள் நம்மை நேசிக்கின்றார்கள்.” – என்றார்.
ரணில் விக்ரமசிங்க ஜனாதிபதியாக இருந்த காலத்தில், தனது மனைவியான பேராசிரியர் மைத்ரி விக்ரமசிங்கவின் பட்டமளிப்பு விழாவில் கலந்துகொள்வதற்காக லண்டனுக்கு தனிப்பட்ட விஜயம் செய்வதற்காக அரச நிதியை தவறாகப் பயன்படுத்திய குற்றச்சாட்டில் குற்றப் புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகளால் வெள்ளிக்கிழமை (22) பிற்பகல் கைது செய்யப்பட்ட நிலையில் கொழும்பு கோட்டை நீதிவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்ட பின்னர் அவரை எதிர்வரும் 26 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டது.
Leave a comment