யாழ்ப்பாணத்தில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பில் விசாரணை நடத்துவதற்காக இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவினால் நியமிக்கப்பட்ட நால்வர் குழு, யாழ்ப்பாணத்தில் காணாமல் ஆக்கப்பட்ட 281 பேர் குறித்து விவரங்களுடன் சமர்ப்பித்த விசாரணை அறிக்கை 22 ஆண்டுகளுக்குப் பின்னர் இப்போது வெளிப்பட்டுள்ளது.
அவர்களில் 95 வீதத்துக்கும் அதிகமானோர் 1996 – 97 ஆம் ஆண்டு காலப் பகுதியில் யாழ். பிரதேசத்தில் இருந்து சீருடைத் தரப்பினரால் வலிந்து கடத்தப்பட்டுக் காணாமல் ஆக்கப்பட்டவர்கள் என்று தெரிகின்றது.
அவர்களின் முழுப் பெயர், விவரம், விலாசங்கள் பதிவுகளுடன் இந்த அறிக்கை மூலம் கிட்டி இருப்பதால் அவர்களது உறவினர்களின் மரபணுக்களை இப்போது செம்மணிப் புதைகுழியில் மீட்கப்படும் எலும்புக்கூடுகளின் மரபணுக்களோடு ஒப்பிடுவதன் மூலம், அந்த மனித எச்சங்களுக்கு உரியவர்களை அடையாளம் காணக்கூடிய வாய்ப்புக் கிட்டலாம் என்று நம்பப்படுகின்றது.
1996 – 97 ஆம் ஆண்டுக் காலப்பகுதியில் யாழ். பிரதேசத்தில் பல நூற்றுக்கணக்கில் காணாமல் க்கப்பட்டோரின் எலும்புக்கூடுகளே இப்போது செம்மணி மனிதப் புதைகுழிகளில் இருந்து அகழ்ந்து மீட்கப்படுகின்றன எனக் கருதப்படும் நிலையில் அவற்றை அடையாளம் காண்பதற்கான ஒரு திருப்புமுனையாக இந்த விசாரணை அறிக்கை விவரம் அமையும் என்று கருதப்படுகின்றது.
இந்த விசாரணை அறிக்கையின் ஒரு பிரதியைத் தம் கைவசம் பெற்றுள்ள
இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பொதுச்செயலாளர் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன், அதனை இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு மூலம் அதன் உத்தியோகபூர்வ இணையத்தில் வெளியிடச் செய்யும் அழுத்தத்தைக் கொடுக்கும் முயற்சியில் ஈடுபட்டிருக்கின்றார் எனவும் தெரிகின்றது.
யாழ். பிரதேசத்தில் காணாமல் ஆக்கப்பட்டோர் குறித்து விசாரித்து அறிக்கை சமர்ப்பிப்பதற்காகக் கலாநிதி தேவநேசன் நேசையா தலைமையில் கே.எச்.கமிலஸ் பெர்னாண்டோ, ஜஸீமா இஸ்மாயில், எம்.சி.எம்.இக்பால் ஆகிய நால்வரைக் கொண்ட குழு ஒன்றை இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு நியமித்திருந்தது.
இந்தக் குழு யாழ்ப்பாணம், சாவகச்சேரி, கொடிகாமம், சுன்னாகம், மானிப்பாய் போன்ற இடங்களில் ஒன்பது கட்டங்களாக அமர்வுகளை நடத்தி, விசாரணைகளை மேற்கொண்டு, முதலில் இடைக்கால அறிக்கையும், பின்னர் இறுதி அறிக்கையையும் சமர்ப்பித்திருந்தது.
அந்த அறிக்கையிலேயே 1996 – 97 ஆம் ஆண்டு காலப் பகுதியில் காணாமல் ஆக்கப்பட்ட 281 இற்கும் மேற்பட்டவர்களின் விவரங்கள் அடங்கிய பட்டியல் தெளிவாக வெளியிடப்பட்டிருக்கின்றது.
1990 தொடக்கம் 1998 வரையான காலப் பகுதியில் யாழ். பிரதேசத்தில் காணாமல் ஆக்கப்பட்டோர் பற்றி விசாரிப்பதற்கான பொறுப்பு இந்தக் குழுவுக்கு வழங்கப்பட்ட போதிலும், 1996 – 97 இல் காணாமல் ஆக்கப்பட்டோர் பற்றிய முறைப்பாடுகள்தான் பெருமளவில் அந்தக் குழுவுக்குக் கிடைத்தன என்று குழுவின் அறிக்கை தெரிவிக்கின்றது.
குழுவின் அறிக்கையில் செம்மணி, நாவற்குழி தரவைகளில் படம் இணைக்கப்பட்டு, இவ்வாறு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்கள் இங்கேதான் புதைக்கப்பட்டிருக்கின்றார்கள் என்று நம்பப்படுகின்றது எனத் தெளிவான குறிப்பும் – அப்போதே – 22 ஆண்டுகளுக்கு முன்னரே – குறிக்கப்பட்டிருக்கின்றது என்பது குறிப்பிடத்தக்கது.
நாவற்குழியில் இருந்த அரச நெல் களஞ்சியசாலையின் படத்தைப் பிரசுரித்துள்ள அந்த அறிக்கை, தனங்களப்பு, தச்சன்தோப்பு, நாவற்குழி போன்ற இடங்களில் கைது செய்யப்பட்ட பலர் கண்கள் கட்டப்பட்டு, கைவிலங்கிடப்பட்டு, இங்குதான் சித்திரவதை செய்யப்பட்ட பின்னர் அழைத்துச் செல்லப்பட்டார்கள் என்ற குறிப்பையும் தெரிவித்துள்ளது.
அதேபோல் கொடிகாமம் திருநாவுக்கரசு மகா வித்தியாலயத்தில், அந்தப் பகுதியைச் சேர்ந்தோர் கைது செய்யப்பட்டு, தடுத்து வைக்கப்பட்டு, சித்திரவதை செய்யப்பட்டார்கள் என்ற விவரமும் பதியப்பட்டுள்ளது.
அது மாத்திரமல்ல, முறைப்பாடுகளின் அடிப்படையில் பார்த்தால், செம்மணியைச் சூழவுள்ள பிரதேசங்களில்தான் காணாமல் ஆக்கப்பட்டோர் பற்றிய முறைப்பாடுகளின் எண்ணிக்கை அதிகமாக இருப்பது அந்த அறிக்கையில் அவதானிக்கப்பட்டுள்ளது.
அரியாலை -17, சாவகச்சேரி – 19, சுண்டுக்குழி – 6, கொழும்புத்துறை – 7, குருநகர் – 28, யாழ் நகர சுற்றாடல் – 20, யாழ். நகரம் – 17, கைதடி – 8, மட்டுவில் – 7, மறவன்புலோ- 6, மீசாலை – 16, நாவற்குழி -19, நல்லூர் – 8, நுணாவில் – 4, தனங்களப்பு – 4, தச்சன்தோப்பு – 5 என்று அறிக்கையின் இணைப்பான வரைவு விவரம் வெளிப்படுத்துகின்றது.
முறைப்பாடுகளின்படி பார்த்தால் யாழ்ப்பாணம் நகரமும் சுற்றாடலும் – 95 மற்றும் 19, சாவகச்சேரி – 31, கைதடி – 11 கொடிகாமம் – 28, மீசாலை – 16, நாவற்குழி – 19 முறைப்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
அந்த விசாரணை அறிக்கையின்படி இவ்வாறு ஆள்கள் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டமைக்கு இலங்கை அரசின் பாதுகாப்புப் படைகளே காரணம் என்பது சாட்சியங்களில் தெரிவிக்கப்பட்டிருப்பதாக விவரிக்கப்பட்டிருக்கின்றது.
இந்தக் குழுவின் அறிக்கையை ஐ.நா. உதவித் திட்ட ஆதரவுடன் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு அச்சமயத்தில் அச்சிட்டு வெளியிட்டு இருப்பதும் நினைவூட்டப்படத்தக்கது.
இந்த விசாரணைகளுக்காக அப்போது சட்டத்தரணி மகேஸ்வரி வேலாயுதம், யாழ். மாவட்ட அரச அதிபராக இருந்த பத்மநாபன், மேலதிக அரச அதிபராக இருந்த வைத்திலிங்கம், கிருஷாந்தி கொலை வழக்கின் பிரதான குற்றவாளியான கோப்ரல் சோமரத்ன ராஜபக்ஷ, சித்தார்த்தன் போன்றவர்கள் சாட்சியத்துக்கு அழைக்கப்பட்டு அவர்களும் சாட்சியம் வழங்கியிருக்கிறார்கள்.
டக்ளஸ் தேவானந்தாவும் சாட்சியத்துக்கு அழைக்கப்பட்டார். அவர் ஒரு பிரதிநிதியைத் தம் சார்பில் விசாரணைக்கு அனுப்பி வைத்தார் என அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
செல்வம் அடைக்கலநாதன் சாட்சியமளிக்க அழைக்கப்பட்டார். ஆனால் அவர் பிரசன்னமாகவில்லை என்று அறிக்கை தெரிவிக்கின்றது.
இந்த அறிக்கை விசாரணையின் பின்னர் 2003 ஒக்டோபர் 28 ஆம் திகதி கையளிக்கப்பட்டமையால், அதற்கு முன்னர் சமாதானப் பேச்சு சமயத்தில் விடுதலைப்புலிகளின் யாழ். அரசியல் பொறுப்பாளர் இளம்பரிதியும் சாட்சியத்துக்கு அழைக்கப்பட்டு, சாட்சியம் அளித்திருக்கின்றார் என்பது குழுவின் அறிக்கையில் தெரிகின்றது.
யாழ்ப்பாணத்தில் இராணுவத்தின் நகர கொமாண்டர் குண்டுத் தாக்குதலில் உயிரிழந்த மற்றும் முல்லைத்தீவு படை முகாம் தகர்த்து அழிக்கப்பட்டமை ஆகியவை இடம்பெற்ற 1996 ஜூலை மாதத்தில்தான் ஆள்கள் வலிந்து கடத்திக் காணாமல் ஆக்கப்பட்ட சம்பவங்கள் பெருமளவில் யாழ். பிரதேசத்தில் நிகழ்ந்தன என அறிக்கை விவரிக்கின்றது.
சுமார் 210 பக்கங்கள் கொண்ட இந்த அறிக்கை பலர் காணாமல் ஆக்கப்பட்டமை தொடர்பான விசாரணைகளின் சுருக்க விவரங்களையும் உள்ளடக்கி இருக்கின்றது.
இப்படி காணாமல் ஆக்கப்பட்டோருக்கு நிவாரண அளிப்பது பற்றிய விடயம் பற்றியும் அதில் விவரிக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.
Leave a comment