மட்டக்களப்பு – வவுணதீவு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பன்சேனை, வாதகல்மடு பகுதியில் காட்டுயானை தாக்கியதில், நான்கு பிள்ளைகளின் தாயொருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.
இன்று திங்கட்கிழமை (20) அதிகாலை இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
அந்தப் பெண் தனது வீட்டில் உறங்கிக்கொண்டிருந்தபோது, தகரத்தினால் அமைத்த அவ்வீட்டினுள் இருந்த நெல்லை உண்பதற்காகச் சென்ற காட்டுயானையை கண்டு, அப்பெண் பயத்தில் வெளியே ஓடியபோது யானை தாக்கியுள்ளது.
இதன்போது, அவர் ஸ்தலத்திலேயே உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்தவர் நான்கு பிள்ளைகளின் தாய் எனவும் 58 வயதுடையவர் எனவும் தெரிவிக்கப்படுகிறது.
இந்நிலையில், சம்பவ இடத்திற்குச் சென்ற மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் திடீர் மரண விசாரணை அதிகாரி சடலத்தை பார்வையிட்டு, விசாரணைகளை மேற்கொண்டதன் பினனர், பிரேத பரிசோதனைக்காக, சடலத்தை மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்லுமாறு தெரிவித்துள்ளார்.
இந்த சம்பவம் தொடர்பில் வவுணதீவு பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
யானை தாக்கி உயிரிழந்த பெண்ணின் குடும்பத்திற்கு பத்து இலட்சம் ரூபாய் நிதியுதவி வழங்க மண்முனை மேற்கு பிரதேச செயலகம் நடவடிக்கை எடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
Leave a comment