முல்லைத்தீவு, ஒட்டுசுட்டான் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட முத்துஐயன்கட்டுப் பகுதியில் நேற்றுமுன்தினம் வியாழக்கிழமை இராணுவத்தால் தாக்கப்பட்டுக் காணாமல்போய் தேடப்பட்டு வந்த இளம் குடும்பஸ்தர் முத்துஐயன்கட்டுக் குளத்தில் இருந்து இன்று சனிக்கிழமை சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
இந்த விவகாரம் தொடர்பில் பொதுமக்களிடம் உடனடியாக வாக்குமூலங்களைப் பெறுவதுடன், துரிதகதியில் விசாரணைகளை மேற்கொண்டு, குற்றத்தில் ஈடுபட்ட இராணுவத்தினருக்கு எதிராக மிகக் கடுமையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்று இலங்கைத் தமிழரசுக் கட்சியின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பில் மேலும் தெரியவருகையில்,
நேற்றுமுன்தினம் இராணுவத்தால் தாக்கப்பட்டுக் காணாமல்போன நிலையில் தேடப்பட்டு வந்த முல்லைத்தீவு – ஒட்டுசுட்டான் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட முத்துஐயன்கட்டு இடதுகரை, ஜீவநகர் பகுதியைச் சேர்ந்த 32 வயதான எதிர்மன்னசிங்கம் கபில்ராஜ் எனும் இளம் குடும்பஸ்தர் முத்துஐயன்கட்டு குளத்தில் இருந்து இன்று சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
மேற்படி நபர் உட்பட முத்துஐயன்கட்டு இடதுகரை, ஜீவநகர் பகுதியைச் சேர்ந்த ஐவர், முத்துஐயன்கட்டுக் குளத்துக்கு அண்மைய பகுதியில் அமைந்துள்ள 63ஆவது படைப் பிரிவு இராணுவ முகாம் இராணுவத்தினரால் நேற்றுமுன்தினம் இரவு தாக்கப்பட்டுள்ளனர்.
மேற்படி நபர்கள் தாக்கப்பட்ட சம்பவத்தை அறிந்து அப்பகுதி மக்கள் குறித்த பகுதிக்குச் சென்றபோது, ஓர் இளைஞரை இராணுவத்தினர் மிகக் கொடூரமாகத் தாக்கிக் கொண்டிருந்ததாக நேரில் பார்வையிட்ட ஊர் மக்கள் தெரிவிக்கின்னர்.
இந்நிலையில் இராணுவத்தால் தாக்கப்பட்ட இளைஞரை ஊர் மக்கள் காப்பாற்றச் சென்றபோது அவர்களையும் இராணுவத்தினர் தாக்க முற்பட்டுள்ளதாக மக்களால் தெரிவிக்கப்படுகின்றது.
இதனைத் தொடர்ந்து ஊர் மக்களுக்கும் இராணுவத்தினருக்கும் இடையில் இடம்பெற்ற பலத்த முரண்பாட்டையடுத்து, இராணுவத்தினர் இளைஞரை ஊர் மக்களிடம் ஒப்படைத்துள்ளனர்.
இவ்வாறு இராணுவத்தினரால் தாக்கப்பட்ட மேற்படி இளைஞர் முல்லைத்தீவு மாவட்ட பொது வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார். இந்நிலையில் இராணுவத்தால் தாக்கப்பட்ட ஒருவர் காணாமல்போயிருந்தார்.
இவ்வாறு காணாமல்போயிருந்த நபரை ஊர் மக்கள் இணைந்து முத்துஐயன்கட்டுக் குளத்தில் தேடியதுடன், நேற்று வெள்ளிக்கிழமை முத்துஐயன்கட்டுப்பகுதியில் அமைந்துள்ள இராணுவ முகாமுக்கு முன்பாக ஆர்ப்பாட்டத்திலும் ஈடுபட்டனர்.
இத்தகைய சூழலிலேயே இராணுவத்தால் தாக்கப்பட்டு காணாமல்போயிருந்த நபர் இன்று சனிக்கிழமை காலை முத்துஐயன்கட்டுக் குளத்தில் இருந்து சடலமாக மீட்கப்பட்டிருந்தார்.
குறிப்பாக முத்துஐயன்கட்டு இடதுகரை, ஜீவநகர் பகுதியைச் சேர்ந்த இளைஞர்களுக்கு முத்துஐயன்கட்டுப் பகுதில் உள்ள இராணுவத்தினர் குறைந்த விலையில் எரிபொருள் உள்ளிட்ட பொருட்களை வழங்கி வந்ததாகவும், இவ்வாறு இராணுவத்தால் இளைஞர்களுக்குப் பொருட்கள் வழங்கப்பட்டு வந்த பின்னணியிலேயே இராணுவத்தால் தாக்குதல் சம்பவம் இடம்பெற்றுள்ளதுடன், இந்தக் கொலைச் சம்பவமும் இடம்பெற்றுள்ளதாக அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.
இவ்வாறான சூழலில் சடலம் மீட்கப்பட்ட குறித்த இடம் குற்றப் பிரதேசமாக அடையாளப்படுத்தப்பட்டு, சடலத்தை மீட்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.
அந்த இடத்துக்கு முல்லைத்தீவு மாவட்ட நீதிபதி த.பிரதீபன் வருகை தந்திருந்தார். நீதிவானின் முன்னிலையில் சடலம் குளத்தில் இருந்து மீட்கப்பட்டதுடன், தடயவியல் பொலிஸாரால் தடயவியல் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டதைத் தொடர்ந்து சடலம் உடற்கூற்றுப் பரிசோதனைக்காகக் கிளிநொச்சிக்கு எடுத்துச் செல்லப்பட்டுள்ளது.
இந்த விவகாரம் தொடர்பில் உடனடியாக மக்களிடம் வாக்குமூலங்களைப் பெறுமாறும், குற்றச்செயல்களில் ஈடுபட்ட இராணுவத்தினருக்கு எதிராக உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளமாறும் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் இதன்போது பொலிஸாரிடம் வலியுறுத்தினார்.


Leave a comment