“ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தலைமையிலான தேசிய மக்கள் சக்தி அரசுக்குள் எந்த முரண்பாடுகளோ, பிளவுகளோ இல்லை. நாட்டைக் கட்டியெழுப்புவதற்காக அமைச்சரவை ஒற்றுமையுடன் ஒருமித்துச் செயற்பட்டு வருகின்றது. எனவே, சஜித் பிரேமதாஸவும் நாமல் ராஜபக்ஷவும் பகல் கனவு காணாது அவர்களது கட்சிகளைப் பாதுகாத்துக் கொள்வதில் அவதானம் செலுத்துவதே பொறுத்தமானது.”
– இவ்வாறு அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.
கொழும்பிலுள்ள அரச தகவல் திணைக்களத்தில் நேற்று செவ்வாய்கிழமை நடைபெற்ற வாராந்த அமைச்சரவைத் தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாட்டிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
இதன்போது அவர் மேலும் குறிப்பிடுகையில்,
“அரசுக்குள் எந்த முரண்பாடுகளோ, பிளவுகளோ இல்லை. அது எதிர்க்கட்சிகளின் பகல் கனவாகும். அரசில் முற்போக்கானவர்களை இணைத்துக் கொண்டு ஆட்சியமைக்கத் சஜித் தயாராக இருப்பதாகத் தெரிவித்திருக்கின்றனர். இவை சில ஊடகங்களால் உருவாக்கப்படும் செய்திகளாகும். ஆனால், அவ்வாறு எந்தச் சூழலும் அரசில் இல்லை.
எந்தக் காரணத்தை அடிப்படையாகக் கொண்டும் பிரதமரைப் பதவி நீக்க நாம் எதிர்பார்க்கவில்லை. நாட்டைக் கட்டியெழுப்புவதற்காக அமைச்சரவை ஒற்றுமையுடன் ஒருமித்துச் செயற்பட்டு வருகின்றது. ஒவ்வொரு அமைச்சுக்கள் தொடர்பிலும் புரிதலுடன் செயற்பட்டு வருகின்றோம். “நீங்கள் உங்கள் கட்சிகளைப் பார்த்துக் கொள்ளுங்கள், நாம் பிளவுபடுவோம் எனப் பார்த்துக் கொண்டிருப்பதால் பிரயோசனம் இல்லை” என்று சஜித்திடமும், நாமலிடமும் தெரிவித்துக்கொள்கின்றோம்.
இதற்கு முன்னரும் ஜே.வி.பி., என்.பி.பிக்கு இடையில் முரண்பாடுகள் காணப்படுவதாகவும் வதந்திகள் பரப்பப்பட்டன. லால் காந்த அரசிலிருந்து விலகுவார் எனக் கூறினர். இவ்வாறான வதந்திகள் இரு நாட்கள் மாத்திரமே பெரிதாகப் பேசப்படும். ஆனால், அவற்றால் எவ்வித பிரயோசனமும் இல்லை. நாம் நாட்டின் பொருளாதாரத்தைக் கட்டியெழுப்புவதோடு, அரசியல் கலாசாரத்தையும் மாற்றுவோம்.
அவற்றைப் பார்த்துக் கொண்டு அமைதியாக இருக்குமாறு எதிர்க்கட்சிகளிடம் கேட்டுக்கொள்கின்றோம். அவர்களது பொய்களுக்குப் பதிலளிப்பது பிரயோசனமற்றது. ஆளுந்தரப்பிலுள்ள 159 உறுப்பினர்களும் முற்போக்கானவர்களே.” – என்றார்.
Leave a comment