காணாமல் போனோருக்கு இழப்பீடு வழங்குவதை மாத்திரம் இலக்காகக் கொண்டு முறைப்பாடு தொடர்பான விசாரணைகளை முன்னெடுக்கவில்லை. அவர்களுக்கு என்ன நேர்ந்தது என்பதை வெளிப்படுத்த வேண்டும். நீதியை பெற்றுக்கொடுக்க வேண்டும். கிடைக்கப்பெற்றுள்ள 11 ஆயிரம் முறைப்பாடுகள் தொடர்பான விசாரணைகளை மூன்றாண்டுக்குள் நிறைவு செய்ய எதிர்பார்த்துள்ளோம். மனித புதைகுழி அகழ்வு விடயத்தில் விசேட கவனம் செலுத்தியுள்ளோம். தமது உறவுகளுக்கு என்ன நேர்ந்தது என்பதை அறிந்துக் கொள்ளும் உரிமை தமிழர்களுக்கு உண்டு என நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாடு அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார தெரிவித்தார்.
காணாமல்போனோர் பற்றிய அலுவலக நடவடிக்கை மற்றும் மனித புதைகுழி விவகாரம் தொடர்பில் வினவிய போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அவர் மேலும் தெரிவித்ததாவது,
காணாமல் போனோர் பற்றிய அலுவலகத்துக்கு கிடைக்கப்பெற்ற முறைப்பாடுகள் மற்றும் விசாரணைகள் தொடர்பில் அலுவலகத்தின் மீது குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுள்ளன. இந்த குற்றச்சாட்டுக்கு பிரதான காரணம் அப்போதைய அரசியல் சூழலே தவிர அலுவலகத்தின் குறைப்பாடல்ல.
காணாமல்போனோர் பற்றிய அலுவலகத்தில் நிலவும் ஆளணிப்பற்றாக்குறைக்கு தீர்வு காண்பதற்காக முதற்கட்டமாக 65 பேரை சேவையில் இணைத்துக் கொள்வதற்கு நடவடிக்கை எடுத்துள்ளோம். அதேபோல் விசாரணை அதிகாரிகளுக்கு பயிற்சியளிப்பதற்காக 375 மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது.
காணாமல்போனோர் பற்றிய அலுவலகத்துக்கு இதுவரையில் சுமார் 11 ஆயிரம் முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளன. இவற்றில் 5,000 முறைப்பாடுகள் தொடர்பான விசாரணைகளை இந்தாண்டு நிறைவுப்படுத்தவும், ஏனைய முறைப்பாடுகளை எதிர்வரும் இரண்டாண்டுகளில் நிறைவு செய்யவும் எதிர்பார்த்துள்ளோம்.
காணாமல் போனோருக்கு இழப்பீடு வழங்குவதை மாத்திரம் இலக்காகக் கொண்டு முறைப்பாடு தொடர்பான விசாரணைகளை முன்னெடுக்கவில்லை. அவர்களுக்கு என்ன நேர்ந்தது என்பதை வெளிப்படுத்த வேண்டும். அவர்களுக்கு நீதியை பெற்றுக்கொடுக்க வேண்டும். யுத்தம் முடிவடைந்து 16 ஆண்டுகள் நிறைவடைந்துள்ள போதிலும் காணாமல் போனோர் பிரச்சினைக்கு தீர்வு கிடைக்கவில்லை.
மனித புதைகுழிகள் அகழ்வு குறித்து விசேட கவனம் செலுத்தியுள்ளோம். அகழ்வு பணிகளுக்கு தேவையான நிதி விடுவிக்கப்பட்டுள்ளது. இந்த விடயத்தில் அரசாங்கம் வெளிப்படையாக செயற்படுகிறது. சர்வதேச மட்டத்திலும் ஒத்துழைப்புக்கள் கிடைக்கப்பெற்றுள்ளன. தமது உறவுகளுக்கு என்ன நேர்ந்தது என்பதை அறிந்துக் கொள்ளும் உரிமை தமிழர்களுக்கு உண்டு.
காணாமல்போனோர் விவகாரம், மனித புதைகுழி விவகாரத்தில் வெளிப்படையாகவே செயற்படுகிறோம். இவ்விடயத்தில் தமிழ் அரசியல் தலைமைகள் எமக்கு முழுமையான ஒத்துழைப்பு வழங்க வேண்டும். இந்த விவகாரத்தில் காணப்படும் தொழில்நுட்ப மற்றும் பொதுவான பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதற்கு நாங்கள் தயாராகவே உள்ளோம். காணாமல் போனோர் விவகாரத்தில் எவரையும் பாதுகாக்க வேண்டிய அவசியம் எமக்கு கிடையாது என்றார்.
Leave a comment