Home தாயகச் செய்திகள் மனிதப் புதைகுழிகள்: சர்வதேச விசாரணை நடந்தால் சாட்சியமளிப்பதற்கு நான் தயார் – சோமரத்ன ராஜபக்ஷ!
தாயகச் செய்திகள்முதன்மைச் செய்திகள்

மனிதப் புதைகுழிகள்: சர்வதேச விசாரணை நடந்தால் சாட்சியமளிப்பதற்கு நான் தயார் – சோமரத்ன ராஜபக்ஷ!

Share
Share

யாழ்ப்பாணம், செம்மணி மனிதப் புதைகுழிகள் தொடர்பில் சர்வதேச விசாரணை முன்னெடுக்கப்படும் பட்சத்தில் அதில் சாட்சியமளிப்பதற்குத் தயாராக இருக்கின்றேன் என்று கிருஷாந்தி குமாரசுவாமி படுகொலை வழக்கில் பிரதான குற்றவாளியாக நீதிமன்றத்தில் தீர்ப்பளிக்கப்பட்ட லான்ஸ் கோப்ரல் சோமரத்ன ராஜபக்ஷ தெரிவித்திருக்கிறார் என்று குறிப்பிட்டு அவரின் மனைவி எஸ். சி. விஜயவிக்ரம ஜனாதிபதி 

அநுரகுமார திஸநாயக்கவுக்குக் கடிதமொன்றை அனுப்பி வைத்துள்ளார்.

அத்துடன், 7ஆம் காலணி இராணுவப்படை தலைமையகத்தில் கொலை செய்யப்பட்டு செம்மணி சோதனைச் சாவடிக்குக் கொண்டுவரப்பட்ட கிருஷாந்தி குமாரசுவாமி மற்றும் அவரின் குடும்பத்தாரின் சடலங்களை கப்டன் லலித் ஹேவாகேயின் ஆணைக்கு அமைய புதைத்ததைத் தவிர வேறேந்தக் குற்றத்தையும் தனது கணவர் புரியவில்லை என்றும் அவர் அந்தக் கடிதத்தில் சுட்டிக்காட்டியுள்ளார்.

கடந்தகால அரசாங்கங்கள் இராணுவ உயர் அதிகாரிகளைப் பாதுகாத்துக் கொண்டு, கீழ்மட்ட வீரர்களைத் தண்டிப்பதன் ஊடாக, குற்றமிழைத்த இராணுவத்தினரைத் தாம் தண்டித்திருப்பதாக சர்வதேச சமூகத்துக்குக் கூறி வந்தன என்றும் அவர் அந்தக் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

“செம்மணி சோதனைச் சாவடியானது அக்காலப்பகுதியில் யாழ்ப்பாணத்துக்குள் உள்நுழையும் பிரதான சோதனைச் சாவடியாக இருந்தது. அந்தச் சோதனைச் சாவடியில் பணியாற்றிய எனது கணவர் உள்ளடங்கலாக ஏனைய ஐந்து இராணுவத்தினருக்கு மேலதிகமாக கப்டன் லலித் ஹேவாகேயின் ஆலோசனைக்கு அமைவாக நாளாந்தம் இந்த சோதனைச்சாவடிக்கு வருகைதரும் லெப்டினன்ட் துடுகல, லெப்டினன்ட் உதயகுமார, மொழிபெயர்ப்பாளரான பொலிஸ் பரிசோதகர் சமரசிங்க, பொலிஸ் பரிசோதகர் நஸார் ஆகியோரால் அங்கு அழைத்துவரப்படும் விடுதலைப்புலிகள் இயக்க உறுப்பினரால் அடையாளம் காண்பிக்கப்படும் வீதியில் செல்லும் சந்தேகநபர்கள் செம்மணி சோதனைச்சாவடியில் கைது செய்யப்படுவர்.

அவர்கள் மாலை 4.00 மணியின் பின்னர் ட்ரக் வாகனத்தில் ஏற்றப்பட்டு 7ஆவது காலணி இராணுவப் படை தலைமையகத்துக்குக் கொண்டு செல்லப்படுவர். அங்கு மரணிப்போரின் உடல்கள் இரவு வேளையில் மீண்டும் செம்மணி சோதனைச்சாவடிக்குக் கொண்டுவரப்படும். அவற்றைப் புதைக்குமாறு எனது கணவர் உள்ளிட்ட தரப்பினருக்கு உத்தரவிட்டுவிட்டு, வந்தவர்கள் மீண்டும் திரும்பிச் செல்வார்கள் என்றே எனது கணவர் கூறியிருக்கின்றார். செம்மணி சோதனைச்சாவடியில் இவ்வாறான நடவடிக்கைகள் சுமார் ஒருவருடகாலமாக இடம்பெற்றிருக்கின்றன.

கிருஷாந்தி குமாரசுவாமி உள்ளடங்கலாக அவரது குடும்பத்தினர் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் மாத்திரம் வெளிவந்தமைக்கான காரணம் என்ன? செம்மணி சோதனைச்சாவடியில் இதுவரையில் சுமார் 300 க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டு, கொன்று புதைக்கப்பட்டுள்ளனர். அவ்வாறிருக்கையில் கிருஷாந்தி குமாரசுவாமி குடும்பத்தின் படுகொலை மாத்திரம் வெளியே வந்தமைக்கு இதுவே காரணமாகும்.

முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்கவின் சகோதரியான சுனேத்ரா பண்டாரநாயக்கவின் கணவர் சர்வதேச மனித உரிமைகள் செயல்பாட்டாளரான குமார் ரூபசிங்க ஆவார். குமார் ரூபசிங்க கிருஷாந்தி குமாரசுவாமி குடும்பத்தின் உறவினர் என்பதனால், அவர் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகாவிடம் முன்வைத்த வேண்டுகோளுக்கு இணங்க கிருஷாந்தி குமாரசுவாமி படுகொலை விவகாரம் தொடர்பில் மாத்திரம் கவனம் செலுத்தப்பட்டு, செம்மணி சோதனைச் சாவடியில் பணியாற்றிய எனது கணவர் உள்ளிட்ட இராணுவத்தினர் கைது செய்யப்பட்டு, நீதிமன்றத்தில் முற்படுத்தப்பட்டனர்.

கிருஷாந்தி குமாரசுவாமி உள்ளடங்கலாக அவரது குடும்பத்தினரும் மேலே குறிப்பிட்ட முறைமையில் கப்டன் லலித் ஹேவாகே குழுவினராலேயே கைது செய்யப்பட்டனர். செம்மணி சோதனைச்சாவடியில் இறுதியாகக் கைது செய்யப்பட்ட கிருஷாந்தி குமாரசுவாமி உள்ளிட்ட அவரது குடும்பத்தினர், கைதான அன்றைய தினம் மாலை 4.00 மணியின் பின்னர் 7ஆம் காலணி இராணுவப்படை தலைமையகத்துக்குக் கொண்டு செல்லப்பட்டு, இரண்டு தினங்களில் பின்னர் அவர்கள் கொல்லப்பட்டு, அவர்களின் உடல்கள் மீண்டும் செம்மணி சோதனைச் சாவடிக்குக் கொண்டுவரப்பட்டன. அங்கு எனது கணவர் உள்ளடங்கலாக ஏனைய இராணுவத்தினரிடம் அவர்களது உடல்கள் ஒப்படைக்கப்பட்டதுடன், அவற்றைப் புதைக்குமாறு உத்தரவிட்ட கப்டன் லலித் ஹேவாகே, அங்கிருந்து வெளியேறினார்.

தண்டனை விதிக்கப்பட்டதன் பின்னர் எனது கணவரால் வெளிப்படுத்தப்பட்ட விடயங்களுக்கு அமைவாக 1999 ஆம் ஆண்டு கப்டன் லலித் ஹேவாகே, கப்டன் பெரேரா, லெப்டினன்ட் உதயகுமார, மொழிபெயர்ப்பாளர்களான பொலிஸ் பரிசோதகர் சமரசிங்க, பொலிஸ் பரிசோதகர் அப்துல் ஹமீட் நஸார், லெப்டினன் துடுகல ஆகிய அதிகாரிகள் கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டனர். 6 மாதங்களில் அவர்கள் பிணையில் விடுவிக்கப்பட்டனர். அந்த வழக்குக்கு என்ன நடந்தது என யாருக்கும் தெரியவில்லை.

இந்தச் சம்பவத்தின் பின்னர் எனது கணவர் சார்பில் முன்னிலையாவதற்கு விருப்பம் தெரிவித்து, போகம்பரை சிறைச்சாலைக்கு வருகை தந்து அவரைச் சந்தித்த ஜனாதிபதி சட்டத்தரணி குமார் பொன்னம்பலம், எனது கணவரிடம் விடயங்களைக் கேட்டறிந்ததன் பின்னர் ஐக்கிய நாடுகள் சபைக்குச் சென்று அவரை விடுதலை செய்ய நடவடிக்கை எடுப்பதாகக் கூறியிருந்தார். இருப்பினும் திடீரென குமார் பொன்னம்பலம் சுட்டுக்கொல்லப்பட்டார்.

இந்நிலையில் மேல் நீதிமன்றத்தின் தீர்ப்பு தொடர்பில் எனது கணவரால் உயர்நீதிமன்றத்தில் மேன்முறையீடு செய்யப்பட்டது. இருப்பினும் உயர்நீதிமன்றத்துக்கு அழுத்தம் பிரயோகித்து, எனது கணவர் உள்ளிட்ட தரப்பினருக்கு மீண்டும் மரண தண்டனை விதிக்கச் செய்தவர் அப்போதைய ஜனாதிபதியாவார். செம்மணி சோதனைச் சாவடி குறித்த சகல தகவல்களையும் மேல்நீதிமன்றத்தில் வெளிப்படுத்தியமையே அதற்குக் காரணமாகும். அந்தப் பழிவாங்கல்கள் இன்று வரை தொடர்கின்றன.” – என்றும் அவர் கூறியுள்ளார்.

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

மேலும் செய்திகள்

Related Articles

புதைகுழி பகுதியில் ஸ்கான் பணி! மனித உரிமைகள் ஆணைக்குழுவினரும் பார்வையிட்டனர்!

செம்மணி பகுதியில் தற்போது அகழ்வு பணிகள் முன்னெடுக்கப்பட்டு வரும் இரண்டு மனித புதைகுழிகளுக்கு மேலதிகமாக அப்பகுதியில்...

மனிதப் புதைகுழிப் பகுதிகளில் இன்று ஸ்கான் பரிசோதனை!

அரியாலையில் கண்டறியப்பட்ட மனிதப்புதைகுழி பகுதிகள் இன்று திங்கட்கிழமைஸ்கான் பரிசோதனை செய்யப்படவுள்ளன. அரியாலை – சித்துப்பாத்தி இந்து...

சுருட்டுக்கு பற்றவைத்த தீ யாழில் 95 வயது முதியவரை பலியெடுத்தது!

தவறுதலாக உடையில் தீ பற்றியதால் முதியவர் ஒருவர் நேற்றுமுன்தினம்உயிரிழந்தார். பட்டினசபை வீதி, மானிப்பாய் பகுதியை சேர்ந்த...

முதலமைச்சருக்கு போட்டியிட விரும்புகிறேன் என்கிறார் சுமந்திரன்!

வடக்கு மாகாண சபை தேர்தலில் முதலமைச்சர் வேட்பாளராக போட்டியிட விரும்புகிறேன் என்று இலங்கை தமிழ் அரசு...