வடக்கு – கிழக்கில் அளவுக்கு அதிகமான இராணுவப் பிரசன்னத்துக்கு எதிராக நடந்து முடிந்த ஹர்த்தாலின்போது மட்டக்களப்பு மாநகர சபையின் மேயரைத் தேசிய மக்கள் சக்தியின் மாநகர சபை உறுப்பினர்கள் சிலர் திட்டமிட்டு அவமானப்படுத்தியுள்ளனர் என்று மாநகர சபை அமர்வில் தெரிவிக்கப்பட்டதையடுத்து இலங்கைத் தமிழரசுக் கட்சியின் உறுப்பினர்களுக்கும் தேசிய மக்கள் சக்தியின் உறுப்பினர்களுக்கு இடையே கடும் வாக்குவாதம் இடம்பெற்றது.
மட்டக்களப்பு மாநகர சபையின் மாதாந்த அமர்வு நேற்று வியாழக்கிழமை மாநகர சபை மேயர் சிவம் பாக்கியநாதன் தலைமையில் இடம்பெற்றது.
இதன்போது கடந்த 18 ஆம் திகதி வடக்கு – கிழக்கில் இடம்பெற்ற ஹர்த்தாலின் போது மட்டக்களப்பு மாநகர சபை மேயர் கடைகளைப் பூட்டுமாறு கோரினார் என்று ஊடகங்களில் வெளிவந்த செய்தி உண்மையா அல்லது திரிவுபடுத்தப்பட்டதா எனக் கூறுமாறு மேயரிடம் உறுப்பினர் துரைசிங்கம் மதன் கோரிக்கை விடுத்தார்.
இதனைத் தொடர்ந்து மேயர், “அன்றைய தினம் நான் வீட்டில் இருந்து மாநகர சபைக்குச் செல்லும் போது நகரில் சில கடைகள் திறக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டதையடுத்து அந்தப் பகுதிக்குச் சென்றேன். அப்போது அந்தப் பகுதியில் தேசிய மக்கள் சக்தியின் மாநகர சபை உறுப்பினர்கள் சிலர் மற்றும் கட்சி ஆதரவாளர்கள் நிற்பதைக் கண்டு வாகனத்தை விட்டு இறங்கி தேசிய மக்கள் சக்தியின் உறுப்பினர் ஒருவரிடம் ஹர்த்தால் செய்வதன் நோக்கத்தைத் தெரிவித்தேன்.
அப்போது அங்கு இருந்த தேசிய மக்கள் சக்தியின் மாநகர சபை உறுப்பினர்கள் சிலர் மற்றும் கட்சி ஆதரவாளர்கள் என்னைச் சட்டவிரோதமாக வாகனத்தைப் பயன்படுத்தியதாகப் பேசினர். நான் அப்போது ஒன்றும் பேசவில்லை. அவர்களே வர்த்தகர்கள் எனக்குப் பேசியது போல் வீடியோ எடுத்து ஊடகங்களுக்கு அனுப்பியதுடன் எனக்கு எதிராகப் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடும் செய்திருந்தனர். அங்கு சென்று விசாரணையின் பின்னர் சமாதானமாக இரு தரப்பும் செல்வதாகத் தெரிவித்து அது முடிவுக்குக் கொண்டுவரப்பட்டது.
இந்தநிலையில் நான் கடைய மூடுமாறும் அல்லது அனுமதிப் பத்திரம் இரத்துச் செய்யப்படும் என்றும் வர்த்தகர்களிடம் தெரிவித்ததாகச் சொல்லாத ஒன்றைச் சொன்னதாகக் கூறி எனக்கு அவமானம் ஏற்படுத்தப்பட்டுள்ளது.” – என்றார்.
இதன்போது மேயரைத் திட்டமிட்டு தேசிய மக்கள் சக்தியினர் அவமானப்படுத்துவதாகத் துணை மேயர் வைரமுத்து தினேஷ்குமார் மற்றும் உறுப்பினர் கருணாநிதி ஜனகன் ஆகியோர் தெரிவித்தனர்.
இதையடுத்து தேசிய மக்கள் சக்தியின் உறுப்பினர்களுக்கும் தமிழரசுக் கட்சியின் உறுப்பினர்களுக்கும் இடையில் கடும் வாக்குவாதம் இடம்பெற்றது. சுமந்திரனின் ஹர்த்தாலுக்கு வர்த்தகர்கள் ஆதரவு வழங்க முடியாது என்று தேசிய மக்கள் சக்தியின் உறுப்பினர்கள் தெரிவித்தனர்.
இது தொடர்பில் சபையில் அரை மணித்தியாலயமாக வாக்குவாதம் நீடித்தது. இதையடுத்து மேயர் சபை அமர்வை முடிவுக்குக் கொண்டு வந்தார்.
Leave a comment