யாழ் செம்மணி மனித புதைக்குழி தொடர்பில் பொலிஸ் விசேட குழுவினர் தமது விசாரணை அறிக்கைகளை நீதிமன்றத்துக்கு சமர்ப்பித்த பின்னர் அவற்றை அடிப்படையாகக் கொண்டு அரசாங்கம் உரிய நடவடிக்கை எடுக்கும் என அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.
அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று செவ்வாய்கிழமை (08) இடம்பெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாட்டில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் குறிப்பிடுகையில்,
யாழ். செம்மணி மனித புதைக்குழி தொடர்பில் கடந்த பெப்ரவரி 18ஆம் திகதி அவசர நிர்மாணிப்பு வேலை இடம்பெற்ற போது ஏற்பட்ட நிலையை அடிப்படையாகக் கொண்டு இந்த சம்பவம் முன்னோக்கி கொண்டு செல்லப்படுகின்றது.
கடந்த 7ஆம் திகதி வரை மூன்று சந்தர்ப்பங்களிர் 21 நாட்கள் அகழ்வு நடைபெற்றுள்ளது. இதன்போது 44 மனித எழும்புக் கூடுகள் கண்டு பிடிக்கப்பட்டுள்ளன. அதனோடு மனித பாவனைப் பொருட்கள் 61 கண்டு பிடிக்கப்பட்டுள்ளதாக அறிக்கையிடப்பட்டுள்ளன.
இச்செயற்பாடுகள் யாழ். மாவட்ட நீதிபதி, அவரது கட்டளையின் படி பேராசிரியர் ராஜ். சேவதேவ உள்ளிட்ட குழுவினர், யாழ் மாவட்ட சட்ட வைத்திய அதிகாரி எஸ். பிரதாபன் ஆகியோர் தொடர்புபட்டு மேற்கொள்ளப்படுகின்றது. அடுத்த வழக்கு விசாரணை எதிர்வரும் 25ஆம் திகதி இடம்பெறும்.
பொலிஸ் விசேட குழுவினர் தமது விசாரணை அறிக்கைகளை நீதிமன்றத்திற்கு முன்வைப்பார்கள். என்ன பெறுபேறு என்று நாம் பார்ப்போம். நீதிமன்ற நடவடிக்கைகளுக்கு நாம் ஒத்துழைப்பு வழங்குவோம். குற்றப்புலனாய்வு திணைக்களம் பொலிஸ் விசாரணைகள் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. நீதிமன்றத்திற்கு உரிய தேவைகளுக்கு ஏற்ப தேவையான விசாரணைகள் அரசினால் முன்னெடுக்கப்படும் என்றார்.
Leave a comment