“விடுதலைப்புலிகளின் கொலைப்பட்டியலில்கூட முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் பெயர் இருக்கவில்லை. புலிகள் என் மீதே தாக்குதல் நடத்தினார்கள். மஹிந்தஷவுக்குத் தற்போது வழங்கப்பட்டிருக்கும் 60 பேர் கொண்ட பாதுகாப்பு ஏற்பாடானது மிக அதிகம். அவரின் பாதுகாப்புப் படையணியை 30 பேரைக் கொண்டதாகக் குறைக்க வேண்டும்.” இவ்வாறு பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பில் ஊடகங்களிடம் அவர் மேலும் தெரிவிக்கையில்,
“மஹிந்தவுக்கு பாதுகாப்புக் குறைக்கப்பட்டுள்ளதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவினர் கூறுகின்றனர். ஆனால், அவருக்குத் தற்போது வழங்கப்பட்டுள்ள பாதுகாப்புக்கூட மிகவும் அதிகம் என்றே நான் கூறுவேன். பயங்கரவாதத்தைத் தோற்கடிக்கத் தலைமைத்துவம் வழங்கினார் என்பதற்காக மஹிந்த மீது புலிகள் ஒருபோதும் தாக்குதல் நடத்தவில்லை. தாக்குதல் நடத்துவதற்கு முயற்சியும் எடுக்கவில்லை. புலிகளின் கொலைப்பட்டியலில்கூட மஹிந்தவின் பெயர் இருக்கவில்லை.
புலிகள் என் மீதே தாக்குதல் நடத்தினார்கள். போர் தொடங்கும் முன்பே என் மீது தாக்குதல் நடத்தினர். மஹிந்த வைத்திருந்த பாதுகாப்பு பிரிவில் அரைவாசிப் பேர் மனைவி கடைக்குச் செல்லும்போது பாதுகாப்பு வழங்குவதற்கும், பிள்ளைகள் விளையாடுவதற்கு பாதுகாப்பு வழங்குவதற்குமே பயன்படுத்தப்பட்டனர். இது வெறும் பகட்டு. பாதுகாப்பு அச்சுறுத்தல் இல்லாமல் எதற்கு மஹிந்தவுக்கு இத்தனை பாதுகாப்பு.
நன்கு பயிற்சி வழங்கப்பட்ட 30 பேர் மஹிந்தவின் பாதுகாப்புக்குப் போதும். நான் பாதுகாப்பு அமைச்சின் செயலாளராக இருந்தால், 30 பேரைத்தான் பாதுகாப்புக்கு வழங்குவேன். சிங்கப்பூர் போன்ற நாடுகளில் அமைச்சர்களுக்கு பாதுகாப்பில்லை. அவர்கள் மக்களோடு மக்களாக திரிகிறார்கள். அப்படியொரு நிலைமை எமது நாட்டிலும் வர வேண்டும்.” – என்றார்.
Leave a comment