வடக்கு மாகாண பாடசாலைகளில் இடை விலகலில் ஆண்களே அதிகமாகவுள்ளனர்
என்று ஆளுநர் நா. வேதநாயகன் தெரிவித்தார்.
தேசிய பயிலுநர் கைத்தொழில் பயிற்சி அதிகார சபையில் பயிற்சி நெறியைப் பூர்த்தி செய்த மாணவர்களுக்கான தேசிய தொழில் தகைமை சான்றிதழ் வழங்கும் நிகழ்வு யாழ். மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் நேற்று முன்தினம் நடைபெற்றது. இதன்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அவர் மேலும் கூறுகையில்,
‘தொழில் பயிற்சி மிகவும் முக்கியமானது. தனியார்த் துறையில் பல வேலைவாய்ப்புகள் அதிகமாகவுள்ளன. எதிர்காலத்தில் தொழிற் சாலைகள் ஆரம்பிக்கப்படும் போது நல்ல தொழில் வாய்ப்பு உள்ளது. அப்போது பயிற்சி நெறியைப் பூர்த்தி செய்தவர்களுக்கு முன்னுரிமை அடிப்படையில் தொழில் வாய்ப்பு ஏற்படும்.
மேலும், பாடசாலைகளில் இடை விலகலில் ஆண்களே அதிகமாகவுள்ளனர். இந்த நிகழ்வில் பெண்களின் எண்ணிக்கையே அதிகமாகவுள்ளன. இப் பயிற்சி நெறியின் முக்கியத்துவத்தை ஏனையவர்களுக்கும் தெரியப்படுத்த வேண்டும். மேலும், கிளிநொச்சியில் இயங்கும் தொழில் நுட்பக் கல்லூரிக்கு தென்பகுதியிலிருந்து கற்க மாணவர்கள் வருகின்றார்கள். அவர்களுக்கு அப் பயிற்சி நெறியின் முக்கியத்துவம் விளங்குகிறது.
தேசியபயிலுநர் கைத்தொழில் பயிற்சி அதிகார சபையின் அங்கீகரிக்கப்பட்ட பயிற்சி நெறியை பூர்த்தி செய்தவர்கள் தமது சொந்த முயற்சியிலும் முன்னேற வேண்டும்’ என அவர் மேலும் தெரிவித்தார்.
Leave a comment