பொலிஸ் புலனாய்வாளர்கள் என்று தம்மை அறிமுகம் செய்ததுடன், பொலிஸ் என்று எழுதப்பட்ட மேலங்கியும் அணிந்திருந்த நால்வரால் விசாரணைக்கு என்று அழைத்துச் செல்லப்பட்ட இளைஞர் ஒருவர் பளை பிரதேச மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளார்.
பலாத்காரமாக மோட்டார் சைக்கிளில் ஏற்றிச் சென்ற அவர்கள் தம்மீது தாக்குதல் நடத்திவிட்டு இடையில் இறக்கி விட்டுச் சென்றனர் என்று பாதிக்கப்பட்ட இளைஞர் தெரிவித்துள்ளார்.
நேற்று முன்தினம் இடம்பெற்ற இந்த சம்பவத்தில் பளை – வண்ணான்கேணியைச் சேர்ந்த சிறீதரன் காந்தன் என்ற குடும்பஸ்தரே புலனாய்வாளர்கள் என்று கூறப்படுவோரால் கடுமையாக தாக்கப்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.
இந்த சம்பவம் குறித்து மேலும் அறியவருவதாவது,
பாதிக்கப்பட்ட நபரின் நண்பர் ஒருவர் தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பு தொடர்பில் சமூக வலைத் தளங்களில் பதிவிட்டுள்ளார். அவர் பொலிஸ் விசாரணைக்கு அழைக்கப்பட்டுள்ளார்.
ஆனால், அவர் விசாரணைக்கு செல்லாமல் தலைமறைவாகிவிட்டார் என்று கூறப்படுகிறது.
இந்த நிலையில், தலைமறைவானவர் தொடர்பில் தகவல் அளிக்க வருமாறு பாதிக்கப்பட்டவரிடம் தம்மை புலனாய்வாளர்கள் என்று அறிமுகம் செய்த – பொலிஸ் என்று அடையாளமிடப்பட்ட மேலங்கி அணிந்த நால்வர் அழைத்துள்ளனர். இதற்கு அவர் மறுப்புத் தெரிவித்துள்ளார்.
இதையடுத்து, அவரை வலுக்கட்டாயமாக மோட்டார் சைக்கிளில ஏற்றிச்சென்ற நால்வரும் அவரை தாக்கி விட்டு இடையில் இறக்கி விட்டுச் சென்றுள்ளனர் என்று பாதிக்கப்பட்டவர் கூறியுள்ளார்.
பளை பிரதேச மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நபரிடம் பளை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
Leave a comment