பயங்கரவாத தடைச்சட்டத்தை முழுமையாக இரத்துச்செய்ய வேண்டும் என்று தமிழ் அரசியல் தலைமைகள் தொடர்ச்சியாக வலியுறுத்துவது முறையற்றது. பூகோள பயங்கரவாதத்தை கருத்திற் கொண்டு தேசிய பாதுகாப்பினை முன்னிலைப்படுத்தியதாக இவ்விடயத்தில் தீர்மானம் எடுக்கப்பட வேண்டும்.அத்துடன் பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகள் விடுவிக்கப்பட வேண்டும் என்று முன்னாள் நீதியமைச்சர் ஜனாதிபதி சட்டத்தரணி விஜயதாச ராஜபக்ஷ தெரிவித்தார்.
பயங்கரவாத தடைச்சட்டம் நீக்கம் குறித்து வினவிய போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அவர் மேலும் தெரிவித்ததாவது,
பயங்கரவாத தடைச்சட்டத்தை இரத்துச் செய்வதற்கு முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் காலத்தில் வெளிப்படைத்தன்மையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. பயங்கரவாத தடைச்சட்டத்தை முழுமையாக இரத்துச்செய்ய வேண்டும் என்று தமிழ் அரசியல் தலைமைகள் தொடர்ச்சியாக வலியுறுத்துவது முறையற்றது.
உலகளாவிய ரீதியில் பயங்கரவாதம் தற்போது பல்வேறு வழிகளில் செயற்படுகிறது.இவ்வாறான நிலையில் இலங்கையில் பயங்கரவாத தடைச்சட்டத்தை முழுமையாக இரத்துச் செய்வது பிரச்சினைக்குரியதாக அமையும். தேசிய பாதுகாப்பினை முன்னிலைப்படுத்தியே அனைத்து தீர்மானங்களையும் எடுக்க வேண்டும்.
பயங்கரவாத தடைச்சட்டத்தை இரத்துச் செய்வது தொடர்பில் எமது அரசாங்கத்தில் வெளிப்படையான பல நடவடிக்கைகளை மேற்கொண்டோம்.சிவில் தரப்பினர் உட்பட கொழும்பில் உள்ள வெளிநாட்டு இராஜதாந்திரிகளுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டோம்.
சட்டவரைபு வர்த்தமானி அறிவித்தலில் பிரசுரிக்கும் தருவாயில் இருந்த நிலையில் ஆட்சிமாற்றம் ஏற்பட்டது.பயங்கரவாத தடைச்சட்டத்தை இரத்துச் செய்வதாக தேசிய மக்கள் சக்தி தனது தேர்தல் விஞ்ஞாபனத்தில் குறிப்பிட்டது.
பயங்கரவாத தடைச்சட்டத்தை இரத்துச் செய்யும் காலவரையை ஜனாதிபதியால் குறிப்பிட முடியுமா, இந்த அரசாங்கம் பயங்கரவாத தடைச்சட்டத்தை நீக்கும் என்ற நம்பிக்கை கிடையாது.அரசாங்கத்துக்கு எதிராக மக்கள் ஒன்றிணையும் போது பயங்கரவாத தடைச்சட்டத்தை அரசாங்கம் ஆயுதமாக பயன்படுத்தும்.
ஜனாதிபதி சட்டத்தரணி தலைமையில் குழு நியமிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகிறது.இருப்பினும் இதுவரையில் எவ்வித பேச்சுவார்த்தைகளும் வெளிப்படையானத் தன்மையில் மேற்கொள்ளப்படவில்லை. ஆகவே பயங்கரவாத தடைச்சட்டத்தை இரத்துச் செய்வது சந்தேகத்துக்குரியது என்றார்.
Leave a comment