நாட்டிலுள்ள அரச பல்கலைக்கழகங்களில் பட்டம் பெறும் மாணவர்களில் 50 வீதத்துக்கும் அதிகமானோர் நாட்டை விட்டு வெளியேறி, மீண்டும் நாட்டுக்குத் திரும்புவதில்லை என ஆய்வில் தெரியவந்துள்ளது.
பேராதனைப் பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் வசந்த அதுகோரல மற்றும் லக்ஷ்மன் குமார ஆகியோரால் நடத்தப்பட்ட தொடர்ச்சியான ஆய்வில் இந்த விடயம் தெரிய வந்துள்ளதாக, ஆங்கில நாளிதழ் ஒன்று தெரிவித்துள்ளது.
சில சந்தர்ப்பங்களில், விஞ்ஞானம் சார்ந்த பட்டப்படிப்புகளைப் படிக்கும் அனைத்து மாணவர்களும் நாட்டை விட்டு வெளியேறி, திரும்பி வருவதில்லை என ஆய்வில் சுட்டிக் காட்டப்பட்டுள்ளது.
தற்போது அரச பல்கலைக்கழகங்களில் சுமார் 142,000 இளங்கலை மாணவர்கள் பயின்று வருகின்றனர்.
அவர்களில் 25 வீதமானோர் கலைப் பிரிவிலும், 20 வீதமானோர் முகாமைத்துவம் மற்றும் வணிகப் பிரிவிலும், 13 வீதமானோர் பொறியியல் பிரிவிலும் மருத்துவம், பல் மருத்துவம், கால்நடை மருத்துவம் மற்றும் அதனுடன் தொடர்புடைய சுகாதாரம் ஆகியவற்றில் 10 வீதமானோரும் மற்றும் விவசாயம் மற்றும் கணினி விஞ்ஞானம் ஆகிய பிரிவுகளில் 11 வீதமானோரும் கல்வி கற்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவினால் சமீப காலங்களில் ஆண்டுதோறும் தேசிய பல்கலைக்கழகங்களுக்குச் சுமார் 44,000 மாணவர்கள் உள்வாங்கப்படுகின்றனர்.
2023 ஆம் ஆண்டில் மொத்தப் பட்டதாரி (இளங்கலைப் பட்டம்) வெளியீடு 33,306 ஆக இருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 2023 ஆம் ஆண்டில் பல்கலைக்கழக கல்விக்காக அரசாங்கம் சுமார் ரூ. 87 பில்லியனை செலவிட்டுள்ளது.
இதில் ரூ.69.9 பில்லியன் தொடர்ச்சியான செலவும் ரூ.16.7 பில்லியன் மூலதனச் செலவும் அடங்கும்.
அதற்கு மேலதிகமாக அந்தந்த பல்கலைக்கழகங்கள் தங்கள் சொந்த வருவாய் நிதியையும் செலவிடுவதாகவும் பேராசிரியர் வசந்த அதுகோரல மேலும் கூறினார்.
நிலைமையைக் கருத்தில் கொண்டு, அரச பல்கலைக்கழகங்களில் இலவச உயர்கல்வியை முடித்துவிட்டு இடம்பெயரும் இலங்கை மாணவர்கள் தங்கள் கல்விச் செலவை அரசாங்கத்திடம் திருப்பிச் செலுத்த வேண்டும் என்று ஆய்வு பரிந்துரைக்கிறது.
அரசாங்கத்தால் செலவைச் செலுத்தச் சொல்ல முடியாவிட்டால், குறைந்தபட்சம் அவர்கள் இலங்கைக்கு 50,000 அமெரிக்க டொலர்களை அனுப்ப வேண்டும்.
அநேகமாக அவர்கள் இந்தப் பணத்தை நாட்டில் உள்ள தங்கள் குடும்ப உறுப்பினர்களுக்கு அனுப்ப வேண்டும், இது நாட்டிற்கும் சில நன்மைகளை வழங்குமெனவும் குறிப்பிட்டுள்ளார்.
நாடு முழுவதும் உள்ள 19 அரச பல்கலைக்கழகங்களிலிருந்து சேகரிக்கப்பட்ட தரவுகளின் அடிப்படையில் இந்தப் பரிந்துரை அமைந்துள்ளது.
ஆய்வின்படி, அரசாங்கம் ஆண்டுதோறும் ஒரு மாணவருக்கு சுமார் ரூ.500,000 செலவிடுகிறது, இது பட்டப்படிப்பு திட்டத்தைப் பொறுத்து ஆண்டுக்கு ரூ.400,000 முதல் ரூ.1.4 மில்லியன் வரை மாறுபடும்.
இருப்பினும், அதிக எண்ணிக்கையிலான பட்டதாரிகள், குறிப்பாக விஞ்ஞானம், விவசாயம் மற்றும் பொறியியல் பட்டதாரிகள் இடம்பெயர்ந்து திரும்பி வருவதில்லை எனவும் ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், நாட்டின் தற்போதைய வேலையின்மை நிலைமை காரணமாக, பட்டதாரிகளை இலங்கையில் தங்க, கட்டாயப்படுத்துவது நடைமுறைக்குச் சாத்தியமில்லை என்பதையும் ஆய்வாளர்கள் ஏற்றுக் கொண்டுள்ளனர்.
நாட்டில் தனியார் அல்லது அரசுத் துறையில் குறைந்த ஊதியம் வழங்கப்படுவதால், பெரும்பாலான பெற்றோர்களும் தங்கள் பிள்ளைகள் இடம்பெயர ஆதரவளிக்கின்றனர்.
பல்கலைக்கழகக் கல்வியிலிருந்து தொழில்முனைவோரை உருவாக்குவது இந்தப் போக்கைத் தவிர்ப்பதற்கு நீண்டகாலத் தீர்வாக இருக்கலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Leave a comment