பொறுப்புணர்வு மற்றும் சிறந்த அயலுறவு கொள்கையின் அடிப்படையில், எந்தவித நிபந்தனைகளுமின்றி இலங்கைக்கான இந்தியாவின் உதவிகள் முன்னெடுக்கப்படுவதாக இலங்கைக்கான இந்தியத் தூதுவர் சந்தோஷ் ஜா தெரிவித்தார்.
இந்தியாவின் 77ஆவது குடியரசு தினத்தை முன்னிட்டு நேற்று இந்திய இல்லத்தில் நடைபெற்ற நிகழ்வில் உரையாற்றிய அவர்,
இந்தியாவின் வெளியுறவு கொள்கையில் இலங்கைக்கு விசேட இடம் வழங்கப்பட்டுள்ளதாக கூறினார்.
இரு நாடுகளுக்கிடையிலான உறவு நம்பிக்கை, நல்லெண்ணம் மற்றும் மக்களிடையிலான உறவுகள் மூலமாக மேலும் வலுப்பெற்றுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
மின் சக்தி வலையமைப்பு ஒருங்கிணைப்பு, சம்பூர் சூரியமின்சக்தி திட்டம், திருகோணமலை எரிசக்தி மைய அபிவிருத்தி உள்ளிட்ட பல்வேறு திட்டங்களில்
குறிப்பிடத்தக்க முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.
ரயில் பாதை புனரமைப்பு, துறைமுக அபிவிருத்தி, கப்பல் மற்றும் விமான சேவைகள் மூலம் இரு நாடுகளுக் கிடையிலான பௌதீக இணைப்புகள் வலுப்பெற்றுள்ளன என தூதுவர் கூறினார்.
இலங்கையின் டிஜிற்றல் அடையாள அட்டை திட்டம், யு.பி.ஐ கொடுப்பனவு முறைமை போன்றவற்றின் மூலம் டிஜிற்றல் ஒத்துழைப்பு மேம்படுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.
2025 ஆம் ஆண்டில் இலங்கைக்கு அதிகளவான சுற்றுலா பயணிகள் இந்தியாவிலிருந்து வருகை தந்துள்ள நிலையில், இந்திய முதலீடுகள் முக்கிய பங்காற்றியுள்ளன என அவர்
குறிப்பிட்டார்.
இலங்கைக்கான இந்திய அபிவிருத்தி ஒத்துழைப்பு 7.5 பில்லியன் அமெரிக்க டொலர்களை கடந்துள்ளதாகவும், அதில் 850 மில்லியன் டொலர்கள் நன்கொடைகளாக வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
டித்வா புயலின் போது இந்தியா முதற்கண் உதவி வழங்கியதாகவும், மனிதாபிமான உதவிகள் துரிதமாகவும் நிபந்தனையற்ற வகையிலும் வழங்கப்பட்டதாகவும் தூதுவர் குறிப்பிட்டார்.
இந்தியா, இலங்கையின் நம்பிக்கைக்குரிய மற்றும் நம்பகமான பங்காளியாக தொடர்ந்து செயல்படும் என அவர் வலியுறுத்தினார்.
Leave a comment