Home தென்னிலங்கைச் செய்திகள் தேசபந்து தென்னக்கோனை பதவி நீக்கம் செய்யும் தீர்மானம் 177 வாக்குகளால் நிறைவேற்றம்!
தென்னிலங்கைச் செய்திகள்முதன்மைச் செய்திகள்

தேசபந்து தென்னக்கோனை பதவி நீக்கம் செய்யும் தீர்மானம் 177 வாக்குகளால் நிறைவேற்றம்!

Share
Share

2002 ஆம் ஆண்டின் 5 ஆம் இலக்க அலுவலர்களை அகற்றுதல் (நடவடிக்கை முறை) சட்டத்தின் 17 ஆம் பிரிவின் பிரகாரம் ரி.எம்.டபிள்யூ. தேசபந்து தென்னக்கோனைப் பொலிஸ்மா அதிபர் பதவியில் இருந்து நீக்குவதற்காக முன்வைக்கப்பட்ட பிரேரணை இன்று செவ்வாய்க்கிழமை நாடாளுமன்றத்தில் பெரும்பான்மையான வாக்குகளால் நிறைவேற்றப்பட்டது.

தேசபந்து தென்னக்கோனைப் பொலிஸ்மா அதிபர் பதவியில் இருந்து நீக்குவதற்கான பிரேரணை இன்று முற்பகல் 11.30 மணி முதல் பிற்பகல் 4 மணி வரை விவாதத்துக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

இதனைத் தொடர்ந்து பிற்பகல் 4.10 மணிக்கு நடத்தப்பட்ட வாக்கெடுப்பில் நாடாளுமன்றத்தில் (வருகை தராத உறுப்பினர்கள் உள்ளடங்கலாக) முழு உறுப்பினர்களின் எண்ணிக்கையில் பெரும்பான்மையானவர்கள், அதாவது 177 உறுப்பினர்கள் பிரேரணைக்கு ஆதரவாக வாக்களித்திருந்தனர். இதற்கு அமைய பெரும்பான்மையான வாக்குகளால் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

வாக்கெடுப்பில் இந்தத் தீர்மானத்துக்கு எதிராக எந்த வாக்கும் பதிவாகவில்லை. ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ மாத்திரம் வாக்களிப்பில் இருந்து விலகியிருந்தார்.

பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னக்கோனை அந்தப் பதவியில் இருந்து நீக்குவது தொடர்பில் விசாரணைக் குழுவொன்றை நியமிக்குமாறு கோரும் பிரேரணை 115 உறுப்பினர்களின் கையொப்பத்துடன் சபாநாயகர் ஜகத் விக்கிரமரத்னவிடம் கடந்த மார்ச் மாதம் கையளிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து குறித்த விசாரணைக் குழுவை அமைப்பதற்கான பிரேரணை 2025 ஏப்ரல் 8ஆம் திகதி நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது.

இதனைத் தொடர்ந்து பொலிஸ்மா அதிபர் ரி.எம்.டபிள்யூ. தேசபந்து தென்னக்கோனால் மேற்கொள்ளப்பட்டதாகக் கூறப்படும் துர்நடத்தை மற்றும் பதவித் தத்துவங்களைப் பாரதூரமான வகையில் துஷ்பிரயோகம் செய்தமை தொடர்பில் விசாரணை செய்வதற்கான குழு நியமிக்கப்பட்டது. இந்தக் குழு அப்போதைய உயர்நீதிமன்ற நீதியரசர் பி.பி. சூரசேனவின் தலைமையில் மற்றும் நீதிபதி டபிள்யூ.எம்.என்.பி. இத்தவல மற்றும் தேசிய பொலிஸ் ஆணைக்குழுவின் தலைவர் ஈ.டபிள்யூ.எம் லலித் ஏக்கநாயக்க ஆகியோரை உள்ளடக்கியதாக அமைக்கப்பட்டது.

இந்தக் குழு நாடாளுமன்றத்தில் கூடி, சட்டத்துக்கு அமைய விசாரணைகளை நடத்தியிருந்தது. விசாரணைகளின் முடிவில் குழுவின் அறிக்கை கடந்த ஜூலை 21ஆம் திகதி சபாநாயகரிடம் கையளிக்கப்பட்டது. இந்த அறிக்கையைச் சபாநாயகர் கடந்த ஜூலை 22 ஆம் திகதி நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்திருந்தார்.

விசாரணைக் குழுவின் அறிக்கைக்கு அமைய பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னக்கோனுக்கு எதிராக சுமத்தப்பட்டுள்ள மொத்தம் 23 குற்றச்சாட்டுகளில் 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 13, 14, 15, 16, 17, 18, 19, 22, மற்றும் 23 ஆம் இலக்கக் குற்றச்சாட்டுகளில் அவர் குற்றவாளியெனக் கண்டறியப்பட்டது.

இந்நிலையில், பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னக்கோனைப் பதவி நீக்கம் செய்யும் தீர்மானம் நாடாளுமன்றத்தில் இன்று பெரும்பான்மையான வாக்குகளால் நிறைவேற்றப்பட்டது.

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

மேலும் செய்திகள்

Related Articles

இலங்கை வருகின்றார் ஆஸி. ஆளுநர் நாயகம் – ஜனாதிபதி, பிரதமரைச் சந்திப்பார்!

ஆஸ்திரேலிய ஆளுநர் நாயகம் சமந்தா ஜாய் மோஸ்டின் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு இலங்கைக்கு வருகை தரவுள்ளார்...

சட்டச் சிக்கல் நீக்கப்படும் வரை மாகாண சபைத் தேர்தல் இல்லை – தேர்தல்கள் திணைக்களப் பணிப்பாளர் அறிவிப்பு!

“மாகாண சபைத் தேர்தல்கள் தொடர்பாக அரசமைப்பு ரீதியில் ஏற்பாடு காணப்பட்டிருப்பினும் எல்லை நிர்ணயம் தொடர்பான பிரேரணை...

புலிகளிடம் இருந்து நாட்டைப் பாதுகாத்த இராணுவத்தினர் போர்க்குற்றவாளிகளா? – நாமல் எம்.பி. கடும் கொதிப்பு!

“விடுதலைப்புலிகள் அமைப்புக்கு நிதி வழங்கியவர்கள் முதலீட்டாளர்களாகவும், அந்த அமைப்பிடம் இருந்து நாட்டைப்  பாதுகாத்த படையினர் போர்க்குற்றவாளிகளாகவும்...

முன்னாள் ஜனாதிபதிகளுக்குரிய ஓய்வூதியத்தை இரத்துச் செய்யாதீர் – எஸ்.பி. வலியுறுத்து!

“முன்னாள் ஜனாதிபதிகளுக்கு அரசால் வழங்கப்படும் மாளிகைகளை மீளப்பெறுவதில் தவறு கிடையாது. ஆனால், முன்னாள் ஜனாதிபதிகளுக்குரிய ஓய்வூதியம்...