திருகோணமலை பிரதான கடற்கரைப் பகுதியில் வைக்கப்பட்ட சர்ச்சைக்குரிய புத்தர் சிலை மற்றும் சட்டவிரோத கட்டுமானங்கள் தொடர்பிலான வழக்கில் கைது செய்யப்பட்ட நபர்களுக்கு எதிர்வரும் 28ஆம் திகதிவரை விளக்கமறியலை நீடித்து நீதிமன்றம் இன்று திங்கட்கிழமை (19) உத்தரவிட்டுள்ளது.
திருகோணமலை நீதவான் நீதிமன்றில் திங்கட்கிழமை (19) நீதிபதி எம்.எஸ்.எம்.சம்சுதீன் முன்னிலையில் குறித்த வழக்கானது விசாரணைக்காக எடுத்துக் கொள்ளப்பட்டபோதே நீதிபதி குறித்த கட்டளையை பிறப்பித்திருந்தார்.
குறித்த வழக்கானது இன்று திங்கட்கிழமை காலை (19) விசாரணைக்காக எடுத்துக் கொள்ளப்பட்டபோது எதிராளிகள் தரப்பில் பிணைக்கான விண்ணப்பம் கோரப்பட்டிருந்தது. இதன்போது வழக்கு தாக்கல் செய்யப்பட்ட சட்டத்தின்கீழ் பிணை வழங்கும் அதிகாரம் தனக்கு இல்லை எனவும் குறித்த சட்டவிரோத கட்டுமானத்தை அகற்றுகின்ற சந்தர்ப்பத்தில் குறித்த குற்றம் தாக்கல் செய்யப்பட்டுள்ள பிரிவுகளில் திருத்தம் மேற்கொண்டு அதன் கீழ் பிணை வழங்க முடியும் எனவும், வழக்காளி தரப்புடன் கலந்துரையாடி ஓர் இணக்கப்பாட்டிற்கு வருமாரும் நீதிபதியால் கோரப்பட்டு வழக்கானது மதியம் 2.30 மணிக்கு ஒத்தி வைக்கப்பட்டிருந்தது. எனினும் குறித்த கட்டுமானங்களை அகற்றுவது தொடர்பாக இணக்கப்பாடு எட்டப்படாமல். மதியம் வழக்கு மீண்டும் ஆரம்பமானது.
குறித்த வழக்கானது மீண்டும் மதியமளவில் விசாரணைக்காக எடுத்துக் கொள்ளப்பட்டபோது எதிராளிகள் தரப்பில் குறித்த இடம் விகாரைக்குரியது எனவும், குறித்த கட்டுமானம் நிரந்தர கட்டுமானம் இல்லை, நான்கு தூண்களை வைத்து கூரை போட்டு மேசையின் மீது புத்தர்சிலை வைக்கப்பட்டிருப்பதாகவும் இதனால் இது சட்டவிரோத கட்டுமானம் இல்லை எனவும் பொய்யான வழக்கு ஒன்றை பொலிஸாரும், கடலோர பாதுகாப்பு திணைக்களத்தினரும் தாக்கல் செய்திருப்பதாகவும் நீண்ட நேரமாக விவாதம் இடம்பெற்றது.
இதனை செவிமடுத்த நீதிபதி வழக்காளியான கடலோர பாதுகாப்பு திணைக்கள உத்தியோகத்தரிடம் குறித்த கட்டுமானம் எவ்வளவு தூரத்தில் இருக்கிறது, அங்கு எத்தனை அடிக்கு குழி தோண்டப்பட்டுள்ளது? அங்கு சீமேந்து பயன்படுத்தப்பட்டிருக்கிறதா? கம்பிகள் பயன்படுத்தப்பட்டிருக்கிறதா? என்பதை வினாவியபோது குறித்த கட்டுமானம் 11 மீட்டற் தூரத்தில் இருப்பதாகவும், 300 மீற்றர் தூரத்திற்குள் திணைக்களத்தின் அனுமதியைப் பெற்றே தற்காலிக கட்டுமானமோ, நிரந்தர கட்டுமானமோ கட்டப்பட வேண்டும் எனவும் கடலோர பாதுகாப்பு திணைக்கள உத்தியோகத்தர் தெரிவித்திருந்தார்.
குறித்த வழக்கில் பிணை வழங்க வேண்டுமாயின் குறித்த சட்டவிரோத கட்டுமானங்களை அகற்றிவிட்டு வந்தால் குற்றப்பிரிவுகளில் மாற்றம் செய்து பிணை வழங்க முடியும் அல்லது குற்றத்தை ஒப்புக் கொண்டால் தண்டப்பணத்தை கட்டிவிட்டு, குறித்த கட்டடம் நீதிமன்றால் அகற்றப்படுவதோடு பிணை வழங்க முடியும் எனவும் தெரிவித்து குற்றவாளிகளுக்கு எதிர்வரும் 28ஆம் திகதிவரை விளக்கமறியலை நீடித்து வழக்கை அதே தினத்தித்திற்கு ஒத்தி வைத்தார்.
இதேவேளை குறித்த புத்தர்சிலையை பொலிஸார்தானே வைத்தார்கள் எனவும் எதிராளிகள் தரப்பில் கூறப்பட்டிருந்தது. இதன்போது கருத்து தெரிவித்த சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் அவ்வாறு நாங்கள் வைத்திருந்தால் நாங்கள் எடுக்கின்றோம் என்ற உரையாடலும் நீதிமன்றில் இடம்பெற்றிருந்தது.
குறித்த வழக்கானது கடந்த புதன்கிழமை (14) விசாரணைக்காக எடுத்துக் கொள்ளப்பட்டபோது திருகோணமலை கல்யாண வன்ச திஸ்ஸ தேரர், பலாங்கொட கஸ்ஸப தேரர், திருகோணமலை சுவித வன்ச திஸ்ஸ தேரர், நந்த தேரர் ஆகிய 4 பௌத்த பிக்குகள் உட்பட 9 பேரை 19ஆம் திகதி திங்கட்கிழமை வரை விளக்கமறியலில் வைக்குமாறும், ஏனைய இருவருக்கு பிடியாணையும் பிறப்பிக்கப்பட்டிருந்தது.
திருகோணமலை பிரதான டச்பே கடற்கரைக்கு அருகில் கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்னர் 2025 நவம்பர் மாதம் 16ஆம் 17ஆம் திகதிகளில் கடலோர பாதுகாப்பு கட்டளை சட்டத்தை மீறி சட்ட விரோதமான முறையில் கட்டுமானங்களை மேற்கொண்டமைக்கு எதிராகவும், புத்தர் சிலையை வைத்து மக்களிடையே குழப்பங்களை ஏற்படுத்திய குற்றச்சாட்டில் 4 பொத்த பிக்குகள் உட்பட 11 பேருக்கு எதிராக கடலோரப் பாதுகாப்பு கட்டளைச் சட்டத்தின் கீழ் 28 (01) மற்றும் 14 (01) போன்ற சட்ட விதிகளுக்கு அமைவாக திருகோணமலை துறைமுக பொலிஸார் குற்றப் பத்திரம் தாக்கல் செய்யப்பட்டு 17.11.2025 அன்று திருகோணமலை துறைமுக பொலிஸாரினால் திருகோணமலை நீதிவான் நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்தது. குறித்த வழக்கானது 26.11.2025 அன்று விசாரணைக்காக எடுத்துக் கொள்ளப்பட்டபோது எதிராளிகள் சார்பில் எவரும் முன்னிலையாகி இருக்கவில்லை.
இந்நிலையில் கடந்த 14ஆம் திகதி புதன்கிழமை குறித்த வழக்கானது மீள விசாரனைக்காக அழைக்கப்பட்டபோது வருகை தந்திருந்த 4 பொளத்த பிக்குகள் உள்ளிட்ட 11 பேருக்கும் 19ஆம் திகதிவரை விளக்க மறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்திருந்தது. இன்றைய தினம் இடம்பெற்ற வழக்கில் குறித்த நபர்களுக்கான விளக்கமறியல் எதிர்வரும் 28ஆம் திகதிவரை நீடிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Leave a comment