தமிழ், முஸ்லிம் சமூகங்களுக்கிடையிலான உள்ளக முரண்பாடுகளை ஒரே மேசையில் பேச்சு நடத்தி தீர்க்க முடியும் என்று அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ரிஷாத் பதியுதீன் நம்பிக்கை தெரிவித்தார்.
நாடாளுமன்ற உறுப்பினர் ஹிஸ்புல்லா கொண்டு வந்த ஓட்டமாவடி எல்லைப் பிரச்சினையை தீர்ப்பது தொடர்பான பிரேரணையில் உரையாற்றியபோதே ரிஷாத் பதியுதீன் இவ்வாறு குறிப்பிட்டார்.
இந்த விவாதத்தில் உரை நிகழ்த்திய அவர் மேலும் தெரிவித்ததாவது:-
“சிறுபான்மை சமூகங்களின் பிரச்சினைகளை நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்து தீர்வு காண முடியாது. எந்த அரசாங்கமானாலும் எமது சமூகங்களின் பிரச்சினைகளைத் தூண்டிவிட முயற்சிக்குமே தவிர, தீர்த்து வைக்க முயற்சிக்காது. கடந்தகால அனுபவங்களூடாக நாங்கள் புரிந்து வைத்துள்ள உண்மையே இது.
ஓட்டமாவடி பிரதேச சபையை எமது கட்சியே வென்றிருந்தது. எனினும், எங்களை ஆட்சியமைக்க விடாமல், ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் கூட்டுச் சேர்ந்து ஆட்சியமைத்துள்ளன. இந்த விடயத்தில் ஏற்பட்ட புரிந்துணர்வு போன்று ஏனைய காணிப் பிரச்சினை மற்றும் கல்விப் பிரச்சினைகளில் ஏன் இவர்களால் ஒன்றுபட முடியாது.
மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள தமிழ்,முஸ்லிம் சமூங்களின் அக முரண்பாடுகளைப் பேசித் தீர்க்க முடியும். கல்முனை வடக்கு பிரதேச செயலக விடயத்தையும் இழுத்தடிக்க வேண்டியதில்லை. சமூகத் தலைமைகள் இணைந்தால் இதையும் இலகுவாகத் தீர்க்கலாம்.
தனிநாடு, சமஷ்டி கோரிப் போராடிய தமிழ்த் தலைமைகள் முஸ்லிம்களின் உள்ளக விடயங்களைப் பெரிதுபடுத்த வேண்டிய அவசியம் இல்லை. நாடாளுமன்றத்துக்குக் கொண்டு வரப்பட்ட சிறுபான்மை சமூகங்களின் எந்தப் பிரச்சினைகளும் தீர்க்கப்பட்டதாக வரலாறுகள் இல்லை.
எனவே, நமது உள்ளகப் பிரச்சினைகளை நாமே பேசித் தீர்த்துக் கொள்வோம். தமிழ், முஸ்லிம் தலைமைகள் ஒரே மேசையில் அமர்ந்தால், எல்லா உள்ளக முரண்பாடுகளுக்கும் முடிவு கிடைக்கும்.” – என்றார்.
Leave a comment