ஈழத் தமிழர்களுக்கு இழைக்கப்பட்ட இன அழிப்புக்குச் சர்வதேச நீதிப் பொறிமுறை வேண்டும் என்பதை வலியுறுத்தி தமிழர் தாயகமான வடக்கு, கிழக்கு மாகாணங்களில் உள்ள 8 மாவட்டங்களிலும் இன்று கவனவீர்ப்புப் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன.
இலங்கையில் மனித குலத்துக்கு எதிராக இடம்பெற்ற வன்முறைகள் மற்றும் போர்க் குற்றங்கள் தொடர்பாக எதிர்வரும் செப்டெம்பர் மாதம் ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் எடுக்கப்படும் இலங்கை தொடர்பான தீர்மானம் வலுப்பெறும் வகையில் இந்தக் கவனவீர்ப்புப் போராட்டங்கள் நடைபெற்றன.
வடக்கு – கிழக்கு சமூக இயக்கத்தின் ஏற்பாட்டில் இடம்பெற்ற இந்தப் போராட்டங்களில், ஈழத்தமிழ் மக்களுக்கு இழைக்கப்பட்ட இன அழிப்புக்குப் பன்னாட்டு நீதிப் பொறிமுறை ஊடான விசாரணைகள் உடன் மேற்கொள்ளப்பட வேண்டும், இனப் படுகொலைகளுக்கான நடவடிக்கைகள் காலம் தாழ்த்தப்படாமல் உடன் மேற்கொள்ளப்பட வேண்டும், தமிழர்களுக்கு எதிராக இலங்கையில் இடம்பெற்ற இன அழிப்பு உட்பட பன்னாட்டுக் குற்றங்களை விசாரிக்கவும் குற்றவாளிகளை விசாரணைக்கு உட்படுத்தவும் ஒரு பன்னாட்டு குற்றவியல் நீதித்துறை அமைப்பை உருவாக்க வேண்டும், வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளுக்கான நீதியைச் சர்வதேசம் கால இழுத்தடிப்பு செய்யாமல் உடன் சர்வதேச நீதிப் பொறிமுறையை மேற்கொள்ள வழி செய்ய வேண்டும், தமிழின அழிப்பு நடந்ததைச் சர்வதேசம் ஏற்றுக்கொள்ள வேண்டும், செம்மணி, மன்னார் மற்றும் பிற பகுதிகளில் காணப்படும் பெரும்பாலான மனிதப் புதைகுழிகள் தொடர்பாகப் பன்னாட்டுத் தணிக்கை நிபுணர்களை விசாரணைக்காக அனுப்ப வேண்டும், தமிழர் பாரம்பரியப் பண்பாட்டுச் சின்னங்களை அழிக்கும் நடவடிக்கைகளை மற்றும் நில ஆக்கிரமிப்புக்களை உடன் நிறுத்த வேண்டும், தமிழ் அரசியல் கைதிகள் உடன் விடுதலை செய்யப்பட வேண்டும், பயங்கரவாதத் தடைச் சட்டம் மற்றும் நிகழ்நிலைச் சட்டத்தை இரத்துச் செய்ய இலங்கை அரசுக்குப் பன்னாட்டு சமூகம் அழுத்தம் கொடுக்க வேண்டும் போன்ற கோரிக்கைகளைப் போராட்டக்காரர்கள் முன்வைத்தனர்.
இதேவேளை, பன்னாட்டு நீதிப் பொறிமுறையை வலியுறுத்தி கையெழுத்தும் திரட்டப்பட்டது.
இந்தப் போராட்டங்களில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் சங்கத்தின் பிரதிநிதிகள், அரசியல் பிரமுகர்கள், சிவில் சமூகப் பிரதிநிதிகள் மற்றும் பொதுமக்கள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.
சர்வதேச சுயாதீன விசாரணைப் பொறிமுறையைக் கோரி வடக்கு – கிழக்கு தமிழ் மக்கள் முன்னெடுக்கின்ற போராட்டங்களுக்கு ஆதரவு தெரிவித்து கொழும்பு ஐ.நா. அலுவலகத்தின் முன்பாக இன்று கவனவீர்ப்புப் போராட்டம் நடைபெற்றது. மாண்புமிகு மலையக மக்கள் சிவில் சமூகக் கூட்டிணைவின் ஏற்பாட்டில் இந்தப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.




Leave a comment