செம்மணி மனித புதைகுழி விவகாரம் தொடர்பில் பிரித்தானியா, இலங்கை அரசாங்கத்துடன் கலந்துரையாடி வருவதாக, பிரித்தானிய வெளிவிவகார அமைச்சர் டேவிட் லாமி (David Lammy) தெரிவித்துள்ளார். வெளிவிவகார குழுக் கூட்டத்தில், பிரித்தானிய நாடாளுமன்ற உறுப்பினர் உமா குமரன், செம்மணி மனித புதைகுழிகள் குறித்து எழுப்பிய கேள்விக்குப் பதிலளிக்கையில், அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
செம்மணியில் கண்டுபிடிக்கப்பட்ட மனித புதைகுழிகள் தொடர்பாக தாம் ஆழ்ந்த கவலை கொண்டுள்ளதாகவும், இது மனித உரிமைகள் மீறல்களாக இருக்கக்கூடும் என்பதால், அது சர்வதேச கவனத்தைப் பெற்றுள்ளதாக டேவிட் லாமி (David Lammy) குறிப்பிட்டார்.
இலங்கை அரசாங்கத்துடன் இந்த விடயம் குறித்து நேரடி பேச்சுவார்த்தைகளை பிரித்தானியா மேற்கொண்டுள்ளது.
கடந்த மாதமும் இது தொடர்பில் கலந்துரையாடப்பட்டது.
இலங்கையின் பல பகுதிகளில் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் குடும்பத்தவர்களுடன் நெருக்கமான தொடர்பினை பேணி வருவதாகவும் டேவிட் லாமி (David Lammy) கூறியுள்ளார்.
காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களுடைய குரல்கள் செவிமடுக்கப்படுவதை உறுதி செய்வதற்காக, அரச சார்பற்ற அமைப்புகள் உட்பட ஏனைய தரப்புகளுடன் இணைந்து செயற்பட்டு வருகின்றோம்.
செம்மணி பகுதியில் சரியான முறையில் அகழ்வு பணிகளை மேற்கொள்வதற்கான தொழில்நுட்ப ஆதரவை வழங்குவது தொடர்பில் ஆராய்ந்து வருவதாகவும் பிரித்தானிய வெளிவிவகார அமைச்சர் கூறினார்.
சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் தொடர்பான ரோம் உடன்படிக்கையில் இலங்கை கைச்சாத்திடவில்லை.
இதன் காரணமாக, இழைக்கப்பட்ட குற்றங்கள் தொடர்பில் விசாரணை செய்வதற்கான சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின் அதிகார வரம்பு மட்டுப்படுத்தப்படுவதாகவும், பிரித்தானிய வெளிவிவகார அமைச்சர் டேவிட் லாமி (David Lammy) தெரிவித்துள்ளார்.
Leave a comment