Home தாயகச் செய்திகள் செம்மணி அகழ்வுப் பணிகள் தற்காலிகமாக இடைநிறுத்தம்! ஜூலை 21 ஆம் திகதி மீள ஆரம்பம்!இதுவரை 65 எலும்புக்கூடுகள் மீட்பு!
தாயகச் செய்திகள்முதன்மைச் செய்திகள்

செம்மணி அகழ்வுப் பணிகள் தற்காலிகமாக இடைநிறுத்தம்! ஜூலை 21 ஆம் திகதி மீள ஆரம்பம்!இதுவரை 65 எலும்புக்கூடுகள் மீட்பு!

Share
Share

யாழ்ப்பாணம், செம்மணி மனிதப் புதைகுழியில் இருந்து இதுவரை 65 என்புத் தொகுதிகள் அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளன. மேலும் இரண்டாம் கட்ட அகழ்வுப் பணிகள் இன்றுடன் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளன. அகழ்வுப் பணிகள் எதிர்வரும் 21ஆம் திகதி மீள ஆரம்பமாகவுள்ளன.

செம்மணி – சித்துப்பாத்தி இந்து மயானத்தில் அடையாளம் காணப்பட்ட மனிதப் புதைகுழி தொடர்பான இரண்டாம் கட்ட அகழ்வுப் பணிகளின் 15 ஆம் நாள் அகழ்வு இன்று இடம்பெற்றது. இதன்போது 11 மனித என்புத் தொகுதிகள் அகழ்ந்து எடுக்கப்பட்டன.

செம்மணி மனிதப் புதைகுழியில் முதற்கட்டமாக பரீட்சாத்தமாக 9 நாட்கள் இடம்பெற்ற அகழ்வுப் பணிகள் ஜூன் மாதம் 7ஆம் திகதியுடன் நிறைவுக்கு வந்திருந்தன.

இரண்டாம் கட்ட அகழ்வுப் பணிகள் கடந்த மாதம் 26ஆம் திகதி ஆரம்பமாகியிருந்தன. இந்நிலையில் இரண்டாம் கட்ட அகழ்வுப் பணிகள் இன்றுடன்நிறைவுக்கு வந்துள்ளன. அகழ்வுப் பணிகள் எதிர்வரும் 21ஆம் திகதி மீள ஆரம்பமாகவுள்ளன.

தொடர்ச்சியாக அகழ்வுப் பணிகளில் ஈடுபட்ட நிபுணர்கள் குழுவினர் மற்றும் பணியாளர்கள் உடல், உள ரீதியாகச் சோர்வடைந்த நிலையிலேயே சிறிய இடைவேளை வழங்கப்பட்டு மீண்டும் அகழ்வுப் பணிகள் இந்த மாதம் 21ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளன.

முதலாம் மற்றும் இரண்டாம் கட்ட அகழ்வுப் பணிகளில் மொத்தமாக 65 மனித என்புத் தொகுதிகள் அடையாளம் காணப்பட்டு அவை முழுவதுமாக அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளன. மனிதப் புதைகுழி முதலில் அடையாளம் காணப்பட்ட “தடயவியல் அகழ்வாய்வுத் தளம் 01” என நீதிமன்றால் அடையாளம் காணப்பட்ட குழியில் இருந்து 63 முழுமையான என்புத் தொகுதிகள் அகழ்ந்து எடுக்கப்பட்டன.

மேலும் செயமதிப் படங்கள் மூலம் மனிதப் புதைகுழி இருக்கலாம் எனச் சந்தேகத்தின் அடிப்படையில் அகழ்வுப் பணிகள் ஆரம்பிக்கப்பட்டு “தடயவியல் அகழ்வாய்வுத் தளம் 02” என நீதிமன்றத்தால் பிரகடனப்படுத்தப்பட்ட பகுதியில் இருந்து இரண்டு முழுமையான என்புத் தொகுதிகள் அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளன.

எனவே, செம்மணி மனிதப் புதைகுழியில் இருந்து இதுவரை 65 முழுமையான என்புத் தொகுதிகள் அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளன. மேலும் புதைகுழியில் இருந்து இதுவரை அகழ்ந்து எடுக்கப்பட்ட பாடசாலை புத்தகப் பை, சிறுவர்கள் விளையாடும் பொம்மை, கண்ணாடி வளையல், ஒரு தொகுதி ஆடைகள், பாதணிகள் போன்ற சான்றுப் பொருட்கள் நீதிமன்றக் கட்டுக்காவலில் வைக்கப்பட்டுள்ளன.

யாழ். நீதிவான் ஏ.ஏ. ஆனந்தராஜாவின் கண்காணிப்பில் துறைசார் நிபுணரும் பேராசிரியருமான சோமதேவாவின் தலைமையில் அகழ்வுப் பணிகள் இடம்பெற்றிருந்தன. காணாமல் ஆக்கப்பட்டோர் ஆணைக்குழுவின் ஆணையாளர் மிராக் ரஹீம், காணாமல் ஆக்கப்பட்டோர் ஆணைக்குழுவின் சட்டத்தரணி பூரணி மரியநாயகம், காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் சார்பான சட்டத்தரணிகளான ஞா.ரனிதா, வி.எஸ்.நிரஞ்சன் மற்றும் சட்ட மருத்துவ அதிகாரி பிரணவன் செல்லையா தலைமையிலான குழுவினரும் அகழ்வுப் பணிகளின் போது முன்னிலையாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

மேலும் செய்திகள்

Related Articles

கூமாங்குளம் குழப்பம்; தமது தரப்பில் ஐவர் காயம் என்கிறது பொலிஸ்!

வவுனியா, கூமாங்குளத்தில் மோட்டார் சைக்கிளில் வந்த குடும்பஸ்தர் ஒருவர் மரணமடைந்ததைத் தொடர்ந்து இடம்பெற்ற அமைதியின்மையில் பொலிஸார்...

மன்னாரில் 02 இலட்சம் போதை மாத்திரைகள் விசேட அதிரடிப் படையால் மீட்பு!

இந்தியாவில் இருந்து கடத்தி வரப்பட்டன என நம்பப்படும் 02 இலட்சம் போதை மாத்திரைகள் விசேட அதிரடிப்...

இலங்கைக்கான புதிய அமெ. தூதராக எரிக் மேயரை நியமிக்கப் பரிந்துரை – வெள்ளை மாளிகை அறிவிப்பு!

இலங்கைக்கான புதிய அமெரிக்கத் தூதராக எரிக் மேயரை நியமிக்க அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் பரிந்துரை...

தேசிய இனங்களின் உரிமைகளை வலியுறுத்தி வவுனியாவில் கையெழுத்துப் போராட்டம்!

அனைத்து தேசிய இனங்களுக்கும் உரிமைகளை உறுதி செய்யுமாறு கோரி சம உரிமை இயக்கத்தின் ஏற்பாட்டில் கையெழுத்துப்...