Home தாயகச் செய்திகள் செம்மணிப் புதைகுழி அகழ்வில் வெளிநாட்டு நிபுணத்துவ சேவை; யாழ்ப்பாணம் நீதிமன்றம் பரிசீலனை!
தாயகச் செய்திகள்முதன்மைச் செய்திகள்

செம்மணிப் புதைகுழி அகழ்வில் வெளிநாட்டு நிபுணத்துவ சேவை; யாழ்ப்பாணம் நீதிமன்றம் பரிசீலனை!

Share
Share

செம்மணி மனிதப் புதைகுழி அகழ்வுப் பணியில் மீட்கப்படுகின்ற எலும்புக்கூடுகளை மரபணு ரீதியாக அடையாளம் காணும் பணிக்கு வெளிநாட்டு நிபுணத்துவ சேவைகளை அகழ்வுப் பணியின்போதே நேரடியாகப் பிரசன்னமாகியிருக்கும் வகையில் பெறுவது குறித்து யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றம் பரிசீலனை செய்கின்றது.

இந்த விடயம் தொடர்பில் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் இன்று யாழ். நீதிவான் நீதிமன்றத்தில் முன்வைத்த நீண்ட சட்ட வாதத்தை அடுத்து இது தொடர்பில் நீதிமன்றம் பரிசீலனை செய்யத் தீர்மானித்தது.

“செம்மணி மனிதப் புதைகுழியில் அகழப்படும் எலும்புக்கூடுகள் அடையாளம் காணப்படுவது மிக முக்கியமாகும். அதற்கு வெளிநாட்டு நிபுணத்துவ சேவையே முன்னைய சந்தர்ப்பங்களில் எல்லாம் பயன்படுத்தப்பட்டு வந்திருக்கின்றது. இப்போது இதுவரையில் இங்கு 147 எலும்புக்கூடுகள் மீட்கப்பட்டிருக்கின்றமையால் அவற்றை அடையாளம் காணும் வெளிநாட்டு நிபுணத்துவ சேவையை பின்னர் நாடாமல், இப்பொழுதே அகழ்வுப் பணி நடக்கும் போதும் அதனோடு சேர்ந்து அந்த நிபுணத்துவத்தை பயன்படுத்துவது முக்கியம்.

அகழ்வின்போதே அவர்கள் பிரசன்மாகியிருப்பது அவசியம்” – என்று அது பற்றிய விவரங்களோடு இன்று யாழ் . நீதவான் நீதிமன்றில் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் வாதம் ஒன்றை முன்வைத்தார்.

அதனைக் கவனத்தில் எடுத்த யாழ். நீதிவான் ஏ.ஆனந்தராஜா வெளிநாட்டு நிபுணத்துவ சேவையை அவ்வாறு பெறுவதாயின் அதற்குப் பொருத்தமான – தகுந்த – வெளிநாட்டுத் தரப்புகள் தொடர்பில் உரிய பரிந்துரைகளைச் செய்யுமாறு சட்ட வைத்திய அதிகாரிக்கு இன்று பணிப்புரை விடுத்தார்.

செம்மணி மனிப் புதைகுழி விவகாரம் இன்று நீதிமன்றத்தில் எடுத்துக்கொள்ளப்பட்ட போது பாதிக்கப்பட்ட மக்கள் மற்றும் பொது அமைப்புகளின் சார்பில் பல சட்டத்தரணிகள் பிரசன்னமாகி இருந்தனர்.

மீட்கப்படும் எலும்புக்கூடுகளை அடையாளம் காணும் பணி தொடர்பான விசாரணைகளில் வாக்குமூலம் அளிக்க விரும்பும் பொதுமக்கள் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் (சி.ஐ.டியினரால்) அச்சுறுத்தப்படுகின்றார்கள் என்ற குற்றச்சாட்டு சட்டத்தரணிகளால் வைக்கப்பட்டது.

ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன், சட்டத்தரணிகளான கே.குருபரன், வி.மணிவண்ணன் போன்றோரும் இந்த விடயத்தைச் சுட்டிக்காட்டினர்.

அதனால் இந்த விசாரணைகளில் குற்றப் புலனாய்வுப் பிரிவினரை விலக்கி வைக்குமாறு உத்தரவிடும்படி சுமந்திரன் வாதம் ஒன்றை முன்வைத்தார்.

”இப்போது நடைபெறுவது ஒரு வகையில் மரண விசாரணைதான். அது முடிவடைந்து, உத்தரவோ, தீர்ப்போ வருவதற்கு முன்னர் அந்த விசாரணைக்குள் குற்றப் புலனாய்வுத் தரப்பினர் வரவேண்டிய தேவை இல்லை. ஆயினும், விதிவிலக்காக இந்த விவகாரத்தில் குற்றப் புலனாய்வுத் துறையினரின் பங்களிப்பைப் பொலிஸ்மா அதிபர் வேண்டியிருக்கின்றார். நீதிமன்றமும் அனுமதித்து இருக்கின்றது. ஆனால் அவர்கள் எலும்புக்கூடுகளை அடையாளம் காணும் பணிக்குத் தாமாகவே முன் வருகின்றபோது மக்களை அச்சுறுத்தி, சிரமத்துக்கு உள்ளாக்கி அந்தப் பொதுமக்களை விடயத்தில் இருந்து விலக்கி வைக்க முயல்கின்றனர்” என்ற சாரப்பட சுமந்திரனின் வாதம் அமைந்தது.

இந்த விடயத்தில் சுமந்திரனின் வாதத்தை நீதிமன்றம் பதிவு செய்தது. ஆயினும், குற்றப் புலனாய்வாளர்களை விலக்கி வைக்கும் கோரிக்கை தொடர்பில் நீதிமன்றம் உத்தரவு எதனையும் வழங்கவில்லை.

கிருஷாந்தி குமாரசாமி பாலியல் வல்லுறவு மற்றும் படுகொலை வழக்கில் குற்றவாளியாகக் காணப்பட்ட இராணுவச் சிப்பாய் சோமரத்ன ராஜபக்‌ஷ அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில் 1990 களின் கடைசியில் செம்மணியில் அகழ்ந்தெடுக்கப்பட்ட 15 மனித எலும்புக்கூடுகள் தொடர்பான வழக்கு கொழும்பு நீதிவான் நீதிமன்றத்தில் உள்ளது. அதனையும் இப்போது அகழப்படும் மனிதப் புதைகுழி விவகாரத்தோடு தொடர்பு படுத்தி அந்த வழக்கையும் யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றத்துக்கு மாற்றும் கோரிக்கை ஒன்றை நீதிச் சேவை ஆணைக்குழு ஊடாக முன்வைக்கும்படியும் சுமந்திரன் விண்ணப்பம் ஒன்றைச் சமர்ப்பித்தார்.

அந்த வழக்கு இந்தப் புதைகுழியோடு எவ்வாறு தொடர்புபடுகின்றது என்று நீதிவான் கேள்வி எழுப்பினார்.

“சோமரத்ன ராஜபக்‌ஷ பல நூற்றுக்கணக்கில் – 300 முதல் 400 வரையான – பொதுமக்கள் இப்பிரதேசத்தில் புதைக்கப்பட்டனர் என்று வாக்குமூலம் அளித்திருந்தார். அப்போது 15 எலும்புக்கூடுகள்தான் மீட்கப்பட்டன. இப்போதுதான் நூற்றுக்கணக்கில் அதே பிரதேசத்தில் எலும்புக்கூடுகள் மீட்கப்படுகின்றன. ஆகவே, அந்த வழக்கையும் இதனோடு ஒன்று சேர்த்து விசாரணை முன்னெடுப்பது முக்கியம்” – என்றார் சுமந்திரன்.

அது தொடர்பில் ஆராய புலனாய்வாளர்களுக்குப் பணிப்புரை வழங்கினார் நீதிவான்.

மீட்கப்பட்ட 147 எலும்புக்கூடுகளில் 90 வீதத்துக்கு அதிகமானவை உடைகள் இன்றி நிர்வாணமாகப் புதைக்கப்பட்டவை என்பது சட்ட வைத்திய அதிகாரியின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருக்கின்றது. அதுவே இங்கு ஒரு பெரும் குற்றச் செயல் இடம்பெற்றிக்கின்றது என்பதை நிரூபிப்பதாகச் சுமந்திரன் தமது வாதத்தின் ஊடாக நீதிமன்றத்தின் கவனத்துக்குக் கொண்டு வந்தார்.

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

மேலும் செய்திகள்

Related Articles

மனித புதைகுழி அகழ்வு விடயத்தில் விசேட கவனம் செலுத்தியுள்ளோம் – அரசாங்கம்!

காணாமல் போனோருக்கு இழப்பீடு வழங்குவதை மாத்திரம் இலக்காகக் கொண்டு முறைப்பாடு தொடர்பான விசாரணைகளை முன்னெடுக்கவில்லை. அவர்களுக்கு...

மருத்துவர்கள் போராட்டத்தால் நோயாளர்களுக்கு பெரும் சிரமம்!

கொடுப்பனவுகள் உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தினால் நேற்று வெள்ளிக்கிழமை காலை 8...

தேசிய மருத்துவமனையாகிறது யாழ்.போதனா!

யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையை தேசிய மருத்துவமனையாக தரம் உயர்த்துதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையின் தற்போதைய...

பரந்தன் இரசாயன தொழிற்சாலையை மீள நிர்மாணிக்க அடிக்கல் நாட்டல்!

பரந்தன் இரசாயன தொழிற்சாலையை மீளவும் நிர்மாணிப்பதற்காக நேற்று புதன்கிழமை அடிக்கல் நாட்டப்பட்டது. சர்வமத தலைவர்களின் ஆசியுடன்...