“மாகாண சபைத் தேர்தல்கள் தொடர்பாக அரசமைப்பு ரீதியில் ஏற்பாடு காணப்பட்டிருப்பினும் எல்லை நிர்ணயம் தொடர்பான பிரேரணை நாடாளுமன்றத்தில் சமர்பிக்கப்பட்டுள்ள நிலையில், அதற்கு இன்று வரை நாடாளுமன்றத்தின் அனுமதி கிடைக்காததால் மாகாண சபைத் தேர்தல்களை நடத்துவதில் சட்டச் சிக்கல் காணப்படுகின்றது. எனவே, அந்தச் சட்டச் சிக்கல் நீக்கப்படும்போது தேர்தல்கள் ஆணைக்குழுவானது மாகாண சபை தேர்தலை நடத்த எந்தச் சந்தர்ப்பத்திலும் தயாராக இருக்கின்றது.” இவ்வாறு தேர்தல்கள் திணைக்களப் பணிப்பாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க தெரிவித்தார்.
மட்டக்களப்பு மாவட்ட தேர்தல்கள் அலுவலக மாநாட்டு மண்டபத்தில் மாவட்ட உதவித் தேர்தல் ஆணையாளர் சட்டத்தரணி எம்.பி.எம். சுபியான் தலைமையில் தேர்தல்கள் ஆணைக்குழுவின் பங்களிப்பு மூலோபாயத் திட்டம் தொடர்பான கலந்துரையாடல் இன்று செவ்வாய்க்கிழமை இடம்பெற்றது. அதன்போது கலந்துகொண்ட தேர்தல்கள் திணைக்களப் பணிப்பாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கையிலேயே மேற்கண்டவாறு கூறினார்.
மக்களின் வாக்களிப்பு பங்கேற்பை அதிகரித்தல், தேர்தல் சட்டம் தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்துதல், சுதந்திரமான – நியாயமான தேர்தலை உறுதி செய்தல், அனைவரையும் உள்ளடக்கிய தேர்தல் பங்களிப்பை அதிகரித்தல் மற்றும் எதிர்காலத் திட்டமிடல் தொடர்பில் மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துதல், தேர்தல் முறையில் காணப்படும் சில குறைபாடுகளை நீக்கி புதிய சட்ட திட்டங்களைக் கொண்டு வருதல், நவீன தொலைத்தொடர்பு வசதிகளுக்கு ஏற்ப எதிர்காலத்தில் நடைபெற இருக்கும் தேர்தல் மற்றும் வாக்காளர் இடாப்புக்குப் புதிய தொழில் நுட்பங்களைப் பயன்படுத்துதல் போன்ற பல விடயங்கள் தொடர்பாக இதன்போது கலந்துரையாடப்பட்டன.
இதில் அரச அதிகாரிகள், உள்ளூராட்சி மன்றப் பிரதிநிதிகள் மற்றும் தேர்தல்கள் கண்காணிப்புச் செயற்பாட்டில் ஈடுபடுபவர்கள் கலந்துகொண்டு பங்களிப்பு மூலோபாய எதிர்காலத் திட்டம் (2026-2029) தொடர்பான தமது ஆலோசனைகள் மற்றும் கருத்துக்களை முன்வைத்தனர்
இந்நிகழ்வில் பிரதி தேர்தல்கள் ஆணையாளர் கே.ஜே.எஸ்.மாதவ, திட்டமிடல் பணிப்பாளர் சன்ன பி.டி. சில்வா மற்றும் தேர்தல் அலுவலக உத்தியோகத்தர்கள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.
Leave a comment