நாடாளுமன்றத்தில் இன்று செவ்வாய்க்கிழமை நடைபெற்ற இறக்குமதி மற்றும் ஏற்றுமதி (கட்டுப்பாட்டுச்) சட்டத்தின் கீழ் பிரசுரிக்கப்பட்ட வர்த்தமானியின் ஒழுங்குவிதிகள் மீதான விவாதத்தில் உரையாற்றுகையில் அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அங்கு அவர் மேலும் உரையாற்றியதாவது,
“எமது மக்களின் இருப்பதை தக்கவைத்துக் கொள்வதற்காக நில அபகரிப்புக்கு எதிரான போராட்டத்தில் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றோம். வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் முப்படைகளிலும் பல்வேறு வழிகளில் நில அபகரிப்பில் ஈடுபடுகின்றன.
வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் பொதுக் காணிகளில் உள்ள மரக் கிளையை தமிழர் ஒருவர் வெட்டினால் அவர் கைது செய்யப்பட்டு, அவர் சிறைக்குச் செல்ல நேரிடும். ஆனால், வடக்கில் மகாவலி வலயத்துக்குட்பட்ட 600 ஏக்கர் காணியைப் பெரும்பான்மை இனத்தைச் சேர்ந்த ஒருவர் சட்டவிரோதமான முறையில் வெற்றிடமாக்கியுள்ளார்.
வவுனியா, ஓமந்தை பொலிஸ் நிலையத்துக்கு முன்னாள் உள்ள காணி ஒன்றைப் பொலிஸார் துப்பரவு செய்துள்ளனர். காணி அபகரிப்பு நிறுத்தப்படும், காணி விடுவிக்கப்படும் என்று ஜனாதிபதி குறிப்பிடுகின்றார். ஆனால் பொலிஸார், முப்படையினர் காணி அபகரிப்பு நடவடிக்கைகளில் தொடர்ந்து ஈடுபடுகின்றார்கள்.” – என்றார்.
இதன்போது எழுந்து கருத்துரைத்த பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால,
‘ஓமந்தை பொலிஸ் நிலையம் தொடர்பில் இன்று காலையில் அறிந்தேன். இந்த விடயம் தொடர்பில் பதில் பொலிஸ்மா அதிபருக்கு அறிவித்தேன். அந்தக் காணி துப்பரவு செய்தல் இடைநிறுத்தப்பட்டுள்ளது.” – என்றார்.
தொடர்ந்து உரையாற்றிய செல்வம் அடைக்கலநாதன் எம்.பி.,
“மிக்க நன்றி. அரசு ஒரு கொள்கையில் செயற்பட்டாலும், வடக்கு மற்றும் கிழக்கில் முப்படையினரும், பொலிஸாரும் பிறிதொரு கொள்கையில் செயற்படுகின்றார்கள். இவ்வாறான மாறுபட்ட கொள்கையினால் அரசின் மீதான மக்களின் நம்பிக்கை சிதைவடையும் என்பதைக் குறிப்பிட்டுக்கொள்கின்றேன்.
மகாவலி வலயத்துக்குட்பட்ட காடுகள் அழிக்கப்பட்டுள்ளன. பெரும்பான்மை இனத்தைச் சேர்ந்த ஒருவர்தான் இந்த நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளார்.” – என்றார்.
இதன்போது எழுந்து கருத்துரைத்த சபை முதல்வர் அமைச்சர் பிமல் ரத்நாயக்க,
“600 ஏக்கர் அல்ல 46 ஏக்கர். ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் உறுப்பினர் ஒருவர்தான் மகாவலி அபிவிருத்தி அதிகார சபைக்குச் சொந்தமான காணியை அழித்துள்ளார். மகாவலி அபிவிருத்தி அதிகார சபை அந்த நபருக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்துள்ளது. அந்த வழக்கு இன்று செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளது. ஆகவே, இந்தச் சம்பவத்துக்கும் எமக்கும் எவ்வித தொடர்பும் இல்லை.” – என்றார்.
தொடர்ந்து உரையாற்றிய செல்வம் அடைக்கலநாதன்,
“மன்னார் மாவட்டத்தில் பல்வேறு வழிகளில் மக்களின் காணிகள் ஆக்கிரமிக்கப்படுகின்றன. அண்மையில் மன்னாரில் பொதுக் காணிகள் துளையிட்டு சோதனைக்குட்படுத்தப்பட்டுள்ளன. இவ்வாறான செயற்பாடுகள் பாதிக்கப்பட்டுள்ள மக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தும்.” – என்றார்.
Leave a comment