யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தில் இம் மாதம் 4ஆம் திகதி சுதந்திர தினத்தன்று இலங்கையின் கொடி இறக்கப்பட்டு கறுப்புக் கொடி ஏற்றப்பட்ட சம்பவம் தொடர்பாக மாணவர்கள் 30 பேர் மீது கடுமையான ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக தெரியவந்துள்ளது.
பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் வட்டாரங்கள் தெரிவிக்கும் தகவல்களின்படி, இது தொடர்பான இறுதி முடிவு ஆணைக்குழுவின் அடுத்த கூட்டத்தில் எடுக்கப்படவுள்ளது.
இந்தச் சம்பவம் தொடர்பாக விரிவான விசாரணை நடத்துமாறு இம்மாதம் 11ஆம் திகதி பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு யாழ். பல்கலைக்கழக நிர்வாகத்தைக் கோரியிருந்தது.
இதனைத் தொடர்ந்து, பல்கலைக்கழகத்தின் இன நல்லிணக்கப் பிரிவுக்குப் பொறுப்பான பேராசிரியர், மாணவர் ஒழுக்காற்று அதிகாரி மற்றும் தலைமைப் பாதுகாப்பு அதிகாரி ஆகியோரைக் கொண்ட குழுவொன்று விசாரணைகளை முன்னெடுத்தது.
குறித்த விசாரணை அறிக்கையானது கடந்த வாரம் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவிடம் சமர்ப்பிக்கப்பட்டது.
தேசிய புலனாய்வு முகவரியினால் வழங்கப்பட்ட வீடியோ காட்சிகள் மற்றும் புகைப்பட ஆதாரங்களின் அடிப்படையில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டன.
இந்தச் சம்பவத்துடன் நேரடியாகத் தொடர்புடையதாகக் கருதப்படும் மாணவர்கள் இருவர் உட்பட மாணவர்கள் 28 பேர் மற்றும் மாணவிகள் 02 பேர் என மொத்தம் 30 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
2025ஆம் ஆண்டும் இதேபோன்ற சம்பவம் இடம்பெற்றபோது, பல்கலைக்கழக நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என ஆணைக்குழு அதிருப்தி வெளியிட்டிருந்தது. இதனால், இம்முறை
கடுமையான நடவடிக்கைகளை எடுக்க ஆணைக்குழு திட்டமிட்டுள்ளது.
பல்கலைக்கழக மட்டத்தில் நடத்தப்பட்ட விசாரணைகளின் போது, மாணவர்களின் மனநிலை குறித்து சில அவதானிப்புகள் அறிக்கையில் இடம்பெற்றுள்ளதாகத் தெரிகின்றது.
சிறுபான்மைத் தமிழ் மக்களின் அபிலாஷைகளுக்கு உரிய மதிப்பு வழங்கப்படாத வரை, இலங்கையின் சுதந்திரதினம் தமிழர்களுக்கு உகந்த நாளல்ல
என்பதை வெளிப்படுத்தவே இந்தச்செயலில் ஈடுபட்டதாக மாணவர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Leave a comment