“கால ஓட்டத்தில் மூடிமறைக்க இடமளிக்காது உயிர்த்த ஞாயிறு தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நியாயத்தைப் பெற்றுக் கொடுக்க தேவையான அனைத்து முயற்சிகளையும் நான் முன்னெடுப்பேன். ஆனால், அது இலகுவான விடயமல்ல என்பதையும் நான் அறிவேன். அரச அதிகாரிகளிடம் அரசே விசாரணையை முன்னெடுக்கும் பலவீனமான நிலை உருவாகியுள்ளது. இது எவ்வளவு கடினமானதாக இருந்தாலும் இந்த விடயத்தில் நீதி, நியாயம் நிலைநாட்டப்படும்.” – என்று ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்தார்.
கொழும்பு உயர் மறைமாவட்ட பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகையின் குருத்துவப் பணிவாழ்வின் 50 ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு நேற்று திங்கட்கிழமை கொழும்பு பேராயர் இல்லத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த கௌரவிப்பு விழாவில் உரையாற்றும் போதே ஜனாதிபதி இவ்வாறு கூறினார்.
அங்கு தொடர்ந்தும் உரையாற்றிய ஜனாதிபதி,
“பின்தங்கியுள்ள சமூகத்தில் மீண்டும் மனிதாபிமானத்தின் உயிரோட்டத்தையும் ஆன்மீகப் பண்புகளையும் கொண்டு வருவதில் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகையின் வகிபாகம் முன்மாதிரியானது. சமூகத்தின் நல்வாழ்வு மற்றும் ஆன்மீகத்தை கட்டியெழுப்புவதற்காக பெரும் பிரயத்தனத்தில் ஈடுபட்டுள்ள அன்னார், பாரிய சேவையாற்றும் ஒரு ராஜதந்திரி. பைபிளை மிக நன்றாக விளக்கி விடயங்களை முன்வைக்கக்கூடிய ஒரு வேத விற்பன்னர். சமூகத்தை எழுச்சியூட்டும் வலுவான ஆளுமை கொண்ட ஒரு பேச்சாளர் போன்ற பாத்திரங்களுக்கு அப்பால் உண்மையான மனித நேயர்.
நாம் சாதாரணமாக ஆபத்தான நிலையில் இருக்கும் போது பதற்றமடைவோம். ஆனால், கர்தினால் ஆபத்தான நிலையில் பதற்றமடைவதில்லை. விசேடமாக உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதலின் போது முழு சமூகத்தையும் ஆற்றுப்படுத்தியது இதற்கு ஒரு சிறந்த உதாரணமாகும். கர்தினால் அந்தச் சந்தர்ப்பத்தை முறையாக அணுகினார். கர்தினாலின் ஆற்றுப்படுத்தும் குணத்தில் இருந்து பயனைப் பெற்றுக்கொள்வதை இந்தச் சமூகம் தவறவிட்டுள்ளது. அதனால் இந்தச் சமூகம் அவருக்குக் கடமைப்பட்டுள்ளது.
நாம் சந்திக்கின்ற ஒவ்வொரு சந்தர்ப்பங்களிலும் கர்தினால் எவ்வளவு மனவேதனையுடன் இருக்கிறார் என்பதை நான் அறிவேன். பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதியைப் பெற்றுக்கொடுக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு அவரது மனதில் கலந்துள்ளது.
சந்திக்கும் அனைத்து சந்தரப்பங்களிலும் பாதிக்கப்பட்ட தரப்பினருக்கு நீதியைப் பெற்றுக்கொடுக்கும் வகையில் விடயங்களை விசாரிப்பார். அது சில சந்தர்ப்பங்களில் அமைதியான தொனியில் இருக்கும். சில சந்தர்ப்பங்களில் குழப்பத்துடன் இருக்கும். இன்னுமொரு சந்தர்ப்பத்தில் அழுத்தம் விடுக்கும் வகையில் இருக்கும். ஆனால், அவருக்குத் தனிப்பட்ட எந்தத் தேவையும் இல்லை என்பதை நாம் அறிவோம்.
உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதுலின் போது பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதியைப் பெற்றுக்கொடுக்க வேண்டிய எண்ணமே எமக்குள்ளது. அது தொடர்பான விசாரணைகளைக் கால ஓட்டத்தில் மூடிமறைக்க இடமளிக்காது நீதியைப் பெற்றுக்கொடுக்கத் தேவையான அனைத்து முயற்சிகளையும் நான் எடுப்பேன் என்பதை கர்தினால் முன்னிலையில் உறுதியாக க் கூறிக்கொள்கின்றேன். அது இலகுவான விடயமல்ல. சில சந்தர்ப்பங்களில் அரசு அரச அதிகாளிடமே விசாரணைகளை மேற்கொள்கின்றது. தற்போது அரசே அரச அதிகாரிகளிடம் விசாரணை முன்னெடுக்கும் பலவீனமான நிலையை எதிர்நோக்கியுள்ளது. இதுவே எமது நெருக்கடி நிலைமை. எனினும் நிச்சயம் நீதி வழங்கப்பட வேண்டும். நாம் அதனைச் செய்வோம்.” – என்றார்.
இந்த நிகழ்வில் மல்வத்து தரப்பின் அநுநாயக்க வண. நியங்கொட விஜிதசிறி தேரர் மற்றும் கலாநிதி வண, ஓமல்பே சோபித நாயக்க தேரர் ஆகியோர் கர்தினாலுக்கு வாழ்த்துகளைத் தெரிவித்தனர்.
மகா சங்கத்தினர், சர்வமதத் தலைவர்கள், இலங்கை கத்தோலிக்க ஆயர்கள் பேரவையின் தலைவர் ஹெரல்ட் அந்தோணி பெரேரா, இலங்கைக்கான வத்திக்கான் அப்போஸ்தலிக்க பிரதிநிதி மொன்சிக்னோர் ரொபர்டோ லுகினி, கொழும்பு உயர் மறை மாவட்ட துணை ஆயர்களான மெக்ஸ்வெல் சில்வா, அந்தோனி ஜயக்கொடி உள்ளிட்ட கத்தோலிக்க அருட்தந்தைகள், பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய, எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ, அமைச்சர்கள், முப்படைத் தளபதிகள், பதில் பொலிஸ்மா அதிபர், வெளிநாட்டுத் தூதுவர்கள் உட்படப் பல பிரமுகர்கள் இந்த நிகழ்வில் கலந்துகொண்டனர்.
Leave a comment