எல்ல – வெல்லவாய வீதியின் 15 ஆவது மைல்கல் பகுதியில் நேற்று இடம்பெற்ற பேருந்து விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 15 ஆக உயர்ந்துள்ளது.
இந்த விபத்தில் காயமடைந்த 18 பேர் பதுளை போதனா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர், அவர்களில் 06 பேர் சிறுவர்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
விபத்துக்குள்ளான பேருந்து சுமார் 1000 மீற்றர் வரை பள்ளத்தில் இழுத்துச் செல்லப்பட்டுக் கவிழ்ந்துள்ளதாகவும் காவல்துறை ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
பேருந்து பள்ளத்தாக்கில் விழுந்ததால், அதிலிருந்தவர்கள் பேருந்திலிருந்து தூக்கி வீசப்பட்டு புதர்களுக்கு மத்தியில் பல்வேறு இடங்களில் கிடந்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது.
காயமடைந்தவர்களை மீட்க காவல்துறை, காவல்துறை சிறப்புப் படை, ராணுவம் மற்றும் பாதுகாப்புப் படையினர் உட்பட ஏராளமான பொது மக்கள் பணியாற்றி வருகின்றனர்.
தங்காலையில் இருந்து எல்லவுக்குச் சுற்றுலாவிற்கு வந்த தங்காலை நகரசபை ஊழியர்கள் குழுவொன்று, தங்காலை நோக்கி திரும்பிக் கொண்டிருந்த போதே இந்த விபத்து ஏற்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.
Leave a comment