‘ஜனநாயக தமிழ்த் தேசியக்கூட்டணி (சங்கு சின்ன கட்சி) பதவிகளைக் கைப்பற்றுவதற்காக எமது உதவிகளை பெற்று விட்டு, செய்த ஒப்பந்தங்களை
மீறுகின்ற வகையில் இப்போது 13 ஆம் திருத்தம் சம்பந்தமாக கூட்டங்கள் வைப்பது தாங்களாக ஒப்பந்தத்தில் இருந்து விலகும் செயலாகத்தான் நாங்கள் பார்க்கின்றோம்.’ – இவ்வாறு அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர் பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாணத்தில் அவர் நேற்று முன்தினம் ஊடகங்களை சந்தித்தபோதே மேற்கண்டவாறு கூறினார்.
மேலும், ‘கூட்டத்தை நடத்தியது தமிழ் கட்சிகள் அல்ல. அது, ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டணியே நடத்தியது. ஜனநாயகத் தமிழ்த்தேசியக் கூட்டணியின் பங்காளிகள் கூடி மாகாண சபைதேர்தலை வைக்க வேண்டும் என்பது தொடர்பிலும் அதனை நடைமுறைப்படுத்த வேண்டும் என்பது தொடர்பிலும் கதைத்துள்ளனர்.
நாங்கள் ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டணியுடன் செய்துகொண்ட ஒப்பந்தத்தில் மிகத் தெளிவாக ஒற்றையாட்சி முறைமைக்குள் தமிழ் அரசியல் நடத்த அறவே இடமில்லை
என்பதனை எழுத்து மூலமாக தெளிவாக வலியுத்தி வந்துள்ளோம். அது மட்டுமன்றி, 13
ஆம் திருத்தம் இறுதித் தீர்வும் அல்ல, ஏக்கிய இராச்சிய யோசனை நிராகரிக்கப்பட
வேண்டும் என்ற இரண்டும் ஒப்பந்தத்தில் தெளிவாகப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
இதற்கு இணங்கி ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டணியின் பங்காளிக் கட்சிகள் அனைவரும் ஒப்பமிட்டனர். அதற்குப்பிறகு உள்ளூராட்சி சபையில் எங்களோடு இணைந்து, நாங்கள் விட்டுக் கொடுப்புகளைச் செய்து அவர்களுக்குப் பதவிகளைக் கொடுத்த பின்பு நன்மைகளை பெற்ற பிறகு இப்போது ஒப்பந்தங்களை மீறுகின்ற வகையில் 13 ஆம் திருத்தம் சம்பந்தமாக கூட்டங்களை வைக்கின்றனர். இதனை
தாங்களாகவே ஒப்பந்தத்தில் இருந்து விலகும் செயலாகத்தான் நாங்கள் பார்க்கின்றோம் என்றார்.
Leave a comment