இலங்கையில் மனித உரிமை மீறல்களுக்குப் பொறுப்பான அதிகாரிகளை கண்டறிந்து பொறுப்புக்கூற வைப்பதற்கு அரசாங்கம் மிகக் குறைந்த முயற்சிகளை மட்டுமே மேற்கொண்டுள்ளதாக அமெரிக்க இராஜாங்க திணைக்களம் குற்றம் சுமத்தியுள்ளது.
இலங்கைக்கான மனித உரிமை நடைமுறைகள் தொடர்பான அமெரிக்க இராஜாங்க திணைக்களத்தின் அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதன்படி, 2024ஆம் ஆண்டில் அரசாங்கமோ அல்லது அதன் முகவர்களோ சட்டவிரோத கொலைகளை புரிந்தமை தொடர்பான பல அறிக்கைகள் வெளியானதாக அமெரிக்க இராஜாங்க திணைக்களம் சுட்டிக்காட்டியுள்ளது.
இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் தரவுகளை மேற்கோள்காட்டி, கடந்த ஆண்டு ஜனவரி முதல் ஓகஸ்ட் வரையான காலப்பகுதியில் காவல்துறையினரால் தடுத்து வைக்கப்பட்டிருந்த 7 பேர் உயிரிழந்ததாகவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் கடந்த ஆண்டு 103 துப்பாக்கிச் சூட்டு சம்பவங்கள் பதிவானதாகவும் அமெரிக்க இராஜாங்க திணைக்களத்தால் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
ஊடகச் சுதந்திரம் உள்ளிட்ட கருத்துச் சுதந்திரம் வழங்கப்பட்டிருந்தாலும், சில சந்தர்ப்பங்களில் இந்த உரிமை கட்டுப்படுத்தப்பட்டதாகவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனினும் குறித்த காலகட்டத்தில் அரச அதிகாரிகளால் அல்லது அவர்களின் சார்பானவர்களினால் வலுகட்டாயமாக காணாமல் போனதாக எந்த தகவலும் பதிவாகவில்லை என்று அதில் கோடிட்டு காட்டப்பட்டுள்ளது.
எனினும் பல தன்னிச்சையான கைது நடவடிக்கைகள் பதிவாகியுள்ளன.
சித்திரவதை மற்றும் மனிதாபிமானமற்ற தண்டனைக்கு தடை உள்ள போதிலும், சில அரச அதிகாரிகள் அவற்றை பயன்படுத்தியமை தொடர்பில் நம்பகமான தகவல்கள் உள்ளதாகவும் அமெரிக்க இராஜாங்க திணைக்களம் தெரிவித்துள்ளது.
அந்த வகையில், நாட்டில் இடம்பெறும் மனித உரிமை மீறல்களை ஆவணப்படுத்தும், அரச சார்பற்ற சர்வதேச நிறுவனம் ஒன்று 6 வழக்குகளை ஆவணப்படுத்தியுள்ளது.
நிகழ்நிலை காப்புச் சட்டம் அரசியலமைப்புக்கு முரணானது என்று உயர் நீதிமன்றம் வியாக்கியானம் அளித்த போதிலும், கடந்த ஆண்டு இறுதி வரை அதில் திருத்தங்கள் மேற்கொள்ளப்படவில்லை என்றும் அமெரிக்க இராஜாங்க திணைக்களம் தெரிவித்துள்ளது.
Leave a comment