Home தாயகச் செய்திகள் இன அழிப்பு செயற்பாடுகள் மீள நிகழாமையை உறுதி செய்ய அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் – சங்கு கூட்டணி கோரிக்கை!
தாயகச் செய்திகள்முதன்மைச் செய்திகள்

இன அழிப்பு செயற்பாடுகள் மீள நிகழாமையை உறுதி செய்ய அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் – சங்கு கூட்டணி கோரிக்கை!

Share
Share

இன அழிப்பு செயற்பாடுகள் மீள நிகழாமையை உறுதி செய்ய அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஜனநாயக தமிழ்த் தேசிய கூட்டணியின் பேராளர் மாநாட்டில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இந்த கோரிக்கை உள்ளிட்ட 15 தீர்மானங்கள் மாநாட்டில் நிறைவேற்றப்பட்டுள்ளதாக, ஜனநாயக தமிழ்த் தேசிய கூட்டணி வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஜனநாயக தமிழ்த் தேசிய கூட்டணியின் முதலாவது பேராளர் மாநாடு, யாழ்ப்பாணம் சாவகச்சேரி நகரசபை பொன்விழா மண்டபத்தில் இன்று நடைபெற்றது.

அரசாங்கம் கொண்டுவர விரும்பும் புதிய அரசியல் அமைப்பானது, சமஷ்டி அரசியல் முறையை அடிப்படையாகக் கொண்டு அமைய வேண்டும் எனவும் ஜனநாயக தமிழ்த் தேசிய கூட்டணியின் பேராளர் மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

அத்துடன், பழைய முறைப்படி மாகாணசபை தேர்தலை நடத்தி, மாகாண அதிகாரத்தை மக்கள் பிரதிநிதிகளிடம் வழங்குவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் இந்த மாநாட்டில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

மேலும், 40 வருடங்களுக்கு முன்னர் தற்காலிக ஏற்பாடாகக் கொண்டுவரப்பட்ட பயங்கரவாத தடைச் சட்டம், தமிழ் மக்களின் விடுதலை போராட்டத்தை நசுக்குவதற்காகவே கொண்டுவரப்பட்டதாகவும் இதன்போது கூறப்பட்டுள்ளது.

இந்த சட்டத்தின் கீழ் நூற்றுக்கணக்கான இளைஞர்,யுவதிகள் கைது செய்யப்பட்டு சித்திரவதைக்குள்ளாகப்பட்டதாகவும் ஜனநாயக தமிழ்த் தேசிய கூட்டணியின் பேராளர் மாநாட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது.

எனவே, ஜனாதிபதியின் உறுதிமொழிக்கு அமைய, பயங்கரவாத தடைச் சட்டம் முற்று முழுதாக இல்லாதொழிக்கப்பட வேண்டும் எனவும் பேராளர் மாநாட்டில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், இலங்கைத் தமிழர்களுக்கு எதிராக ஸ்ரீலங்கா அரசு நடத்திய இன அழிப்பு, போர்க்குற்றங்கள், மனித குலத்துக்கு எதிரான குற்றங்கள் யாவும் அங்கீகரிக்கப்பட்ட ஒரு பன்னாட்டு நீதித்துறை கட்டமைப்பின் ஊடாக விசாரணை செய்யப்பட்டு, பரிகார நீதி வழங்கப்பட வேண்டும் எனவும் இதன்போது வலியுறுத்தப்பட்டுள்ளது.

அத்துடன், சிறைச்சாலைகளில் மிக நீண்டகாலமாகத் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், பேராளர் மாநாட்டின் ஊடாக கோரிக்கை விடுப்பதாக ஜனநாயக தமிழ்த் தேசிய கூட்டணியின் அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

மேலும் மீண்டும் ஒரு போர் ஏற்படுவதற்கான அச்சம் இல்லாத நிலையிலும், அரசியல் கைதிகள் தொடர்ந்து சிறையில் அடைக்கப்பட்டிருப்பது சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

அத்தோடு சிறையிலுள்ள இளைஞர்கள் தங்களது எஞ்சிய காலத்தையாவது அமைதியும் சமாதானமும் நிறைந்த சூழலில் வாழ்வதற்கு அரசாங்கம் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என இம்மாநாடு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோருக்காகப் பல ஆண்டுகளாகத் தொடர்ச்சியாகப் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

பாதிக்கப்பட்டவர்களுக்கு இதுவரை உரிய நீதி கிடைக்கவில்லை என்பது கவலைக்குரியது.

இந்தநிலையில் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளுக்கு அரசாங்கம் உடனடியாக நீதியை வழங்க வேண்டும் என இம்மாநாடு வலியுறுத்தப்பட்டுள்ளது.

இந்திய இழுவை மடிப் படகுகள் மற்றும் சட்டவிரோத மீன்பிடி முறைகளால் 46,000 குடும்பங்களைச் சேர்ந்த இரண்டு இலட்சத்திற்கும் அதிகமான மக்கள் வாழ்வாதாரத்தை இழந்து கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர்.

2016ஆம் ஆண்டு இலங்கை-இந்திய அரசுகள் மேற்கொண்ட கூட்டு இணக்கப்பாட்டின் அடிப்படையில் மீண்டும் பேச்சுவார்த்தைகளை ஆரம்பிக்க வேண்டும்.

1996 மற்றும் 2017-ஆம் ஆண்டின் கடற்றொழில் சட்டங்களை உறுதியாக நடைமுறைப்படுத்துவதுடன், கடற்றொழிலாளர் கிராமங்களில் உள்ள படைத்தரப்பினரை வெளியேற்றி கடற்றொழிலாளர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டும் எனவும் இம்மாநாட்டில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

மேலும் சீரற்ற வானிலை காரணமாக நெல்லை உலர்த்த முடியாமலும், நிர்ணய விலைக்கு விற்க முடியாமலும் விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்தமுறை 8 இலட்சம் ஹெக்டேயர் நிலப்பரப்பில் 30 இலட்சம் மெட்ரிக் தொன் நெல் அறுவடை எதிர்பார்க்கப்படுவதால், நிர்ணய விலையில் முழு நெல்லையும் கொள்வனவு செய்ய அரசாங்கம் போதிய நிதியை ஒதுக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

அத்துடன் வடக்கு மாகாணத்திற்கு மகாவலி நீர் வருவதற்கான வாய்ப்புகள் இல்லை எனத் தெரிந்தும், ‘மகாவலி எல்’ வலயம் என்ற பெயரில் சிங்களக் குடியேற்றங்கள் முன்னெடுக்கப்படுவதாக இம்மாநாடு குற்றம் சாட்டுகிறது.

வவுனியா வடக்கு பிரதேசத்திலும் இவ்வாறான திட்டமிட்ட குடியேற்றங்கள் மூலம் தமிழ் கிராமங்கள் மற்றும் விவசாய நிலங்களை மூழ்கடிக்கக்கூடிய ‘கிவுல் ஓயா’ திட்டத்தை உடனடியாகக் கைவிட வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.

மேலும் ஜனாதிபதி பதவிக்கு வந்ததும் தமிழ் மக்களிடமிருந்து பறிக்கப்பட்ட காணிகள் விடுவிக்கப்படும் என உறுதியளித்திருந்தும், 16 மாதங்கள் கடந்தும் இன்னும் காணிகள் விடுவிக்கப்படவில்லை.

இராணுவக் கட்டுமானங்கள் தொடர்வது தமிழ் மக்கள் மீதான பாரபட்சத்தைக் காட்டுவதாகவும், வெற்று வாக்குறுதிகளைத் தவிர்த்து உடனடியாக மக்களின் வதிவிடங்களை விடுவிக்குமாறும் கோரப்பட்டுள்ளது.

அத்துடன் தொல்லியல் மற்றும் வனவளத் திணைக்களங்கள் ஊடாகத் தமிழ் மக்களின் நிலங்கள் பறிக்கப்படுவதையும், சட்டவிரோத புத்த கோயில் கட்டுமானங்களையும் தடுத்து விசாரணை நடத்த வேண்டும் எனவும் குறித்த மாநாட்டில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

அதுமட்டுமன்றி மயிலத்தமடு, மாதவனை போன்ற மேய்ச்சல் தரை ஆக்கிரமிப்புகளைத் தடுத்து, வாகரை பிரதேசத்தில் சட்டவிரோத இறால் பண்ணைகள் மற்றும் கனிம அகழ்வுகளை நிறுத்த வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டது.

மேலும் அம்பாறை மாவட்டத்திலுள்ள கல்முனை வடக்கு தமிழ் பிரதேச செயலர் பிரிவை முழுமையான அதிகாரங்கள் கொண்ட செயலகமாகத் தரம் உயர்த்த வேண்டும்.

கடந்த நான்கு தசாப்தங்களாக (40 ஆண்டுகள்) இதற்காகத் தமிழ் மக்கள் தொடர்ச்சியாகப் போராடி வருகின்றனர்.

கடந்தகால அரசாங்கங்கள் இப்பிரச்சினையைத் தீர்க்காமல் மக்களை ஏமாற்றி, இனப் பகைமையை வளர்க்கும் விதமாகவே செயற்பட்டுள்ளன.

இதன்படி ‘அனைவரும் இலங்கையர்’ எனக் கூறும் தற்போதைய அரசு, கல்முனைத் தமிழர்களுக்கு இழைக்கப்படும் இந்த நீண்டகால அநீதிக்கு உடனடியாகத் தீர்வு காண வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.

மேலும் ‘பிரஜா சக்தி’ திட்டத்தை இலங்கை அரசு உடனடியாகக் கைவிட வேண்டும் என இந்த மாநாட்டில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

அத்துடன் மாகாண சபை நிர்வாகத்துடன் சட்டரீதியான தொடர்பில்லாத ஆளும் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களை உள்வாங்கி, கல்வி, சுகாதாரம், விவசாயம் உள்ளிட்ட துறைகளின் பொறுப்புகளை வட மாகாண ஆளுநர் பகிர்ந்து வழங்கியுள்ளார்.

இந்தச் செயல் சட்டவிரோதமானது மற்றும் மாகாண சபை நிர்வாகத்தைச் சிறுமைப்படுத்தும் நடவடிக்கையாகும்.

ஆளுநர் இந்த சட்டவிரோத நடவடிக்கையை உடனடியாகக் கைவிட வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

மேலும் செய்திகள்

Related Articles

ஊடகவியலாளர் இராமச்சந்திரனுக்கு நீதி கோரி பருத்தித்துறையில் போராட்டம்!

இலங்கை இராணுவத்தினாரால் கைது செய்யப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட வடமராட்சி – கரவெட்டியை சேர்ந்த ஊடகவியலாளரும் ஆசிரியருமான...

வவுனியாவில் சிறுமி ஒருவரைக் காணவில்லை என பொலிஸில் முறைப்பாடு!

வவுனியாவில் 15 வயது மாணவி ஒருவரைக் காணவில்லை என முறைப்பாடு கிடைத்துள்ளதாக வவுனியா பொலிஸார் நேற்றுத்...

இலங்கை வெளிப்படுத்திய செயலாற்றம் ஒரு வெற்றிக்கதையாகும் – IMF பணிப்பாளர்!

சர்வதேச நாணய நிதியத்தின் விரிவாக்கப்பட்ட நிதிவசதிச்செயற்திட்டத்தின்கீழ் இலங்கை வெளிப்படுத்திய செயலாற்றம் ஒரு வெற்றிக்கதையாகும் எனத் தெரிவித்துள்ள...

கொலை அச்சுறுத்தல்; கிளிநொச்சியில் ஒருவருக்கு ஐந்து ஆண்டுகால கடூழியச் சிறை!

கொலை அச்சுறுத்தல் விடுத்தமை, பொலிஸாரின் கடமைக்கு இடையூறு ஏற்படுத்தியமை, கொள்ளைகளில் ஈடுபட்டமை உள்ளிட்ட குற்றங்களுடன் தொடர்புடைய...