Home தாயகச் செய்திகள் இந்த அருமையான வாய்ப்பை அரசு கோட்டை விடக் கூடாது! ஐ.நா. மனித உரிமைகள் ஆணையளார் இலங்கையிடம் அழுத்தமான கோரிக்கை!
தாயகச் செய்திகள்முதன்மைச் செய்திகள்

இந்த அருமையான வாய்ப்பை அரசு கோட்டை விடக் கூடாது! ஐ.நா. மனித உரிமைகள் ஆணையளார் இலங்கையிடம் அழுத்தமான கோரிக்கை!

Share
Share

சர்வதேச குற்றங்கள் உட்பட கடந்த காலங்களில் செய்யப்பட்ட கடுமையான மீறல்கள் மற்றும் துஷ்பிரயோகங்களுக்குத் தண்டனை விலக்களிப்பு வழங்கும் போக்கிலிருந்து விடுபடவும், மாற்றத்துக்கான சீர்திருத்தங்களைச் செயல்படுத்தவும், நீண்டகாலமாக நிலுவையில் உள்ள நீதி மற்றும் பொறுப்புக்கூறலை வழங்குவதற்கும் கிடைத்திருக்கும் வரலாற்றுச் சிறப்புமிக்க இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொண்டு முன்னேறுமாறு இலங்கை அரசை வலியுறுத்திக் கேட்டிருக்கின்றார் ஐ.நா. மனித உரிமைகள் ஆணையளார் வோல்கர் டர்க்.

ஜெனிவாவில் ஐ.நா. மனித உரிமைகள் அலுவலகம் இன்று வெளியிட்ட அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

“இன்று, பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி வழங்குவது, சட்டத்தின் ஆட்சியை மீட்டெடுப்பது, பாகுபாடு மற்றும் பிளவுபடுத்தும் அரசியலை நீக்குவது உள்ளிட்ட நீண்டகால பிரச்சினைகளில் இருந்து விடுபட்டு இலங்கை கடந்த காலத்திலிருந்து மீண்டெழுவதற்கு அருமையான ஒரு வாய்ப்பை முன்வைப்பதற்கு அரசியல் தலைமைக்கு சந்தர்ப்பம் கிட்டியிருக்கின்றது. இந்த உறுதிமொழிகளை பயனுள்ள விளைவுகளாக மாற்றுவதற்கு இப்போது ஒரு விரிவான சாலை வரைபடம் தேவை” – என்று ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர் வோல்கர் டர்க் அந்த அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

“இந்தச் செயல்முறை, உள்நாட்டுப் போரின் போது நடந்த மீறல்கள், துஷ்பிரயோகங்கள் மற்றும் குற்றங்கள், அரசு மற்றும் பாதுகாப்புப் படையினர், அதேபோல் எல்.ரி.ரி.ஈ. போன்ற அரசு சாராத ஆயுதக் குழுக்களின் பொறுப்பு மற்றும் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் சமூகங்கள் மீது இந்த வன்முறையின் நீடித்த தாக்கம் ஆகியவற்றின் தெளிவான மற்றும் முறையான ஏற்றுக்கொண்ட ஒப்புதலுடன் தொடங்க வேண்டும். இலங்கைக்கு எனது விஜயத்தின் போது நான் நேரில் கண்டமை போல, பாதிக்கப்பட்டவர்களின் வலி மற்றும் துன்பம் இன்னும் தெளிவாகத் தெரிகின்றது. மேலும் உண்மை மற்றும் நீதிக்கான அவர்களின் கோரிக்கைகள் கவனிக்கப்பட வேண்டும்.” – என்றும் ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர் குறிப்பிட்டுள்ளார்.

ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர் இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்ட சொற்ப காலத்திலேயே இந்த அறிக்கை வெளியாகியுள்ளது. இலங்கையில் அவர் அரசு, சிவில் சமூகம், பாதிக்கப்பட்டவர்களின் குழுக்கள், அரசியல் கட்சிகள் மற்றும் மதத் தலைவர்களுடன் கலந்துரையாடி, திருகோணமலை, யாழ்ப்பாணம் மற்றும் கண்டி ஆகிய இடங்களுக்கு விஜயம் செய்தார்.

இந்த அறிக்கை பாதுகாப்புத் துறையின் விரிவான கட்டமைப்பு சீர்திருத்தத்துக்கும், நாட்டின் சர்வதேச மனித உரிமைகள் தொடர்பான கடமைப்பாடுகளுக்கு இணங்க பரந்த அரசமைப்பு, சட்ட மற்றும் நிறுவன சீர்திருத்தங்களுக்கும் அழைப்பு விடுக்கின்றது.

“இந்த நடவடிக்கைகள் அரசின் ‘தேசிய ஒற்றுமை’ என்ற தொலைநோக்கு பார்வையை உணர்ந்து கொள்வதற்கும், எல்லாவற்றுக்கும் மேலாக கடந்த கால மீறல்கள் மீண்டும் நிகழாமல் இருப்பதை உறுதி செய்வதற்கும் மிக முக்கியமானவை.” – என்றும்  வோல்கர் டர்க் கூறியுள்ளார்.

பொறுப்புக்கூறல், நல்லிணக்கம் மற்றும் மனித உரிமைகளை முன்னேற்றுவதில் இலங்கையை ஆதரிப்பதற்கான ஐ.நா. மனித உரிமைகள் அலுவலகத்தின் தொடர்ச்சியான உறுதிப்பாட்டை அவர் மீண்டும் வலியுறுத்தியுள்ளார்.

ஒரு சுயாதீனமான பொது வழக்குத் தொடுநர் அலுவலகத்தை நிறுவுவதற்கான அரசின் முன்முயற்சியை அறிக்கை வரவேற்கின்றது.

கடுமையான மனித உரிமை மீறல்கள் மற்றும் சர்வதேச மனிதாபிமான சட்டத்தின் கடுமையான மீறல்கள் தொடர்பான வழக்குகளை விசாரிக்க ஒரு சுயாதீனமான சிறப்பு ஆலோசகர் உட்பட ஒரு அர்ப்பணிப்புள்ள நீதித்துறை பொறிமுறையை நிறுவ அறிக்கை பரிந்துரைக்கின்றது.

மேலும், வடக்கு மற்றும் கிழக்கில் இராணுவத்தால் கைப்பற்றப்பட்ட நிலங்களை விடுவித்தல், பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தை இரத்துச்  செய்தல் மற்றும் நீண்டகாலமாகப் பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டவர்களை விடுவித்தல் (அவர்களில் சிலர் இப்போது பல தசாப்தங்களாக சிறையில் உள்ளனர்.) ஆகியவற்றையும் அறிக்கை கோருகின்றது.

இலங்கையிலும் சர்வதேச அளவிலும் அர்த்தமுள்ள பொறுப்புக்கூறல் மற்றும் நல்லிணக்க முயற்சிகளுக்கு பங்களிக்குமாறு இந்த அறிக்கை சர்வதேச சமூகத்தையும் வலியுறுத்துகின்றது.

“சர்வதேச சட்டத்தின் கீழ் குற்றங்களை விசாரித்து, வழக்குத் தொடுத்து, பொறுப்புக்கூறலை உறுதி செய்வதற்கான முதன்மை பொறுப்பு இலங்கை அரசிடம் இருந்தாலும், இதை சர்வதேச வழிமுறைகளால் பூர்த்தியாக்கி ஈடு செய்ய முடியும்” என்றும் அறிக்கை கூறுகின்றது.

குறிப்பாக பொறுப்புக்கூறல் தொடர்பான பணிகளை மேற்கொள்வதற்கும் நல்லிணக்க முயற்சிகளுக்கு பங்களிப்பதற்கும் ஐ.நா. மனித உரிமைகள் அலுவலகத்தின் வலுப்படுத்தப்பட்ட திறனைப் பயன்படுத்த ஐ.நா. உறுப்பு நாடுகளை அறிக்கை வலியுறுத்துகின்றது.

நினைவுகூரல் மற்றும் விவாதத்துக்கு அரசு இடம் அளித்துள்ள நிலையில், சிவில் சமூகச் செயற்பாட்டாளர்களை – குறிப்பாக வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்கள் மற்றும் பொறுப்புக்கூறல் நடவடிக்கைகளுக்காகச் செயற்படுபவர்களை – காணித் தகராறுகள் மற்றும் சுற்றுச்சூழல் பிரச்சினைகளுக்ககப் பணியாற்றுபவர்களை – குறிவைத்துத் தொடர்ந்து மிரட்டல்கள் மற்றும் துன்புறுத்தல்கள் இடம்பெறுகின்றமையை அறிக்கை விவரிக்கின்றது.

அத்துடன் காணாமல்போனவர்களின் குடும்பங்கள் மிரட்டப்படுகின்றமை மற்றும் கண்காணிப்புக்கு உட்படுத்தப்படுகின்றமை ஆகியவற்றையும் அறிக்கை விவரிக்கின்றது.

பயங்கரவாதத் தடைச் சட்டத்தை இரத்துச் செய்வதற்கான உறுதிமொழிகள் இருந்தபோதிலும், புதிய அரசு மக்களைக் கைது செய்து தடுத்து வைக்க இந்தச் சட்டத்தைத் தொடர்ந்து பயன்படுத்துகின்றது.

தொடர்ந்து நடைபெறும் தன்னிச்சையான கைதுகள் மற்றும் தடுப்புக்காவல்கள், சித்திரவதைகள் மற்றும் காவலில் உள்ள மரணங்கள் ஆகியவற்றை இந்த அறிக்கை விவரிக்கின்றது.

மேலும் பயங்கரவாதத் தடைச் சட்டத்தைப் பயன்படுத்துவதற்கு உடனடித் தடை விதிக்குமாறு அரசை அது வலியுறுத்துகின்றது.

கருத்து வெளிப்பாடு மற்றும் கருத்துச் சுதந்திரம், கூட்டிணைதல் மற்றும் அமைதியான ஒன்றுகூடல் போன்ற அடிப்படை உரிமைகளைக் கட்டுப்படுத்தும் பிற சட்டங்கள் அல்லது முன்மொழியப்பட்ட சட்டங்களைத் திருத்தவோ அல்லது இரத்துச் செய்யவோ அறிக்கை கோருகின்றது. இதில் இணையப் பாதுகாப்புச் சட்டம், சர்வதேச் சிவில், அரசியல் பட்டயச் சட்டம், அரசு சாரா தொண்டு நிறுவனங்கள் தொடர்பான சட்ட வரைவு மற்றும் தனிப்பட்ட தரவு பாதுகாப்புச் சட்ட வரைவு ஆகியவையும் அடங்கும்.

பொருளாதார நெருக்கடி மற்றும் தற்போதைய கடன் சுமையின் கடுமையான தாக்கங்களையும் – குறிப்பாக ஏழ்மையானவர்கள் மற்றும் பிற பாதிக்கப்படக்கூடிய சூழ்நிலைகளில் உள்ளவர்கள், தோட்டத் துறையில் உள்ள மலையகர் தமிழ் சமூகம் உட்பட அனைத்து இலங்கையர்களுக்கு ஏற்படும் தாக்கங்களையும் இந்த அறிக்கை ஆராய்கின்றது.

பொருளாதார, சமூக மற்றும் கலாசார உரிமைகளை உணரத் தேவையான நிதி இடத்தை அரசுக்கு வழங்கவும், சிக்கன நடவடிக்கைகள் நாட்டின் மனித உரிமைகள் கடமைகளை நிறைவேற்றுவதற்கான திறனைக் குறைமதிப்புக்கு உட்படுத்தாமல் இருப்பதை உறுதி செய்யவும் சர்வதேச நிதி நிறுவனங்கள் மற்றும் வெளிப்புறக் கடன் வழங்குநர்களை ஐக்கிய நாடுகள் மனித உரிமைகளுக்கான ஆணையாளர் வோல்கர் டர்க் அந்த அறிக்கையில் வலியுறுத்துகின்றார்.

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

மேலும் செய்திகள்

Related Articles

மட்டக்களப்பில் நீதி கோரி கவனயீர்ப்பு போராட்டம்!

செம்மணி, முல்லைத்தீவு மற்றும் சட்டவிரோத சமூகச்  செயற்பாடுகளுக்கான நீதி கோரும் கவனவீர்ப்புப் போராட்டம் இன்று புதன்கிழமை...

புலம்பெயர் ஈழத்தமிழர்களைச் சுமந்து சென்ற MV Sun Sea கப்பல் கனடாவை அடைந்து 15 ஆண்டுகள் நிறைவு!

தாயகத்தில் நடைபெற்ற போருக்குப் பின்னர் ஏதிலாக புலம்பெயர்ந்த ஈழத்தமிழர்கள் 492 பேரை கடல்வழியாக சுமந்து சென்ற...

இலங்கையின் மனித உரிமை மீறல்கள் தொடர்பில் அரசாங்கத்தின் மீது அமெரிக்கா குற்றச்சாட்டு!

இலங்கையில் மனித உரிமை மீறல்களுக்குப் பொறுப்பான அதிகாரிகளை கண்டறிந்து பொறுப்புக்கூற வைப்பதற்கு அரசாங்கம் மிகக் குறைந்த...

கடற்றொழில் மற்றும் நீரியல் வளங்கள் திணைக்களத்தின்யாழ். மாவட்ட உதவிப் பணிப்பாளராக அகிலன் நியமனம்!

கடற்றொழில் மற்றும் நீரியல் வளங்கள் திணைக்களத்தின் யாழ்ப்பாணம் மாவட்ட உதவிப் பணிப்பாளராக அகிலன் நியமிக்கப்பட்டுள்ளார். கடற்றொழில்...