அரச அதிகாரிகள் இந்த அரசுக்கு எதிராக வெகுவிரைவில் வீதியில் இறங்கிப் போராடுவார்கள் என்று ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
கொழும்பில் நேற்றுப் புதன்கிழமை நடைபெற்ற நிகழ்வொன்றின் பின்னர் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கையில் அவர் மேற்கண்டவாறு கூறினார்.
அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்,
“நடுத்தர மக்களை நெருக்கடிக்குள்ளாக்கும் வகையில் இந்த அரசு செயற்படுகின்றது. ஆட்சிக்கு வருவதற்கு முன்னர் நடுத்தர மக்களை பாதுகாப்பதாகக் குறிப்பிட்டார்கள். ஆனால், இன்று நடுத்தர மக்களின் தொழில் நடவடிக்கைகளை முற்றாக இல்லாதொழிக்கும் வகையில் அரசு செயற்படுகின்றது.
ஜனாதிபதியின் பொது மன்னிப்பு விவகாரம் மற்றும் கொள்கலன் விடுவிப்பு விவகாரத்தில் அரசின் முறைகேடான செயற்பாடு அரச அதிகாரிகள் மீது சுமத்தப்பட்டுள்ளது. அரச சேவையாளர்கள் அரசுக்கு எதிராக வெகுவிரைவில் குரல் எழுப்புவார்கள். அவர்கள் வீதியில் இறங்கி இந்த அரசுக்கு எதிராகப் போராடுவார்கள்.
அரச சேவையை வினைத்திறனாக்குவதாகக் குறிப்பிட்டுக் கொண்டு அந்தச் சேவையை அரசியல் மயப்படுத்தும் வகையில் அரசு செயற்படுகின்றது. அரசின் செயற்பாடுகளை மக்கள் வெகுவிரைவில் விளங்கிக் கொள்வார்கள்.
தேசிய மக்கள் சக்தியின் அரசியல் செயற்பாட்டாளர்களாகச் செயற்பட்ட ஷானி அபேசேகர மற்றும் ரவி செனவிரத்ன ஆகியோரின் நியமனம் தொடர்பில் அமைச்சர் பிமல் ரத்நாயக்க குறிப்பிட்ட விடயம் பாரதூரமானது. இவ்விருவரும் மக்கள் விடுதலை முன்னணியின் ஊடகச் சந்திப்புக்களை நடத்தினார்கள்.
அமைச்சர் பிமல் ரத்நாயக்க குறிப்பிட்ட விடயத்தின் உண்மையைக் கத்தோலிக்கச் சபை வெளிப்படுத்த வேண்டும். உயிர்த்த ஞாயிறு தினக் குண்டுத் தாக்குதல்கள் தொடர்பான விசாரணைகள் சிறந்த முறையில் முன்னெடுக்கப்படுவதாக அரசு குறிப்பிடுவது வரவேற்கத்தக்கது. தேர்தல் காலத்தில் தேசிய மக்கள் சக்தி குறிப்பிட்ட பொய்களுக்கு முடிவு அப்போதுதான் கிடைக்கும்.” – என்றார்.
Leave a comment